செய்திகள்

மக்களின் சிரமத்தை போக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

Published On 2016-11-27 07:55 GMT   |   Update On 2016-11-28 05:23 GMT
ரூபாய் நோட்டு பிரச்சனை தொடர்பாக மக்களின் சிரமத்தை போக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை:

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் சைதாப்பேட்டையில் இன்று களக்காடி எல்லப்பன் இல்ல திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

இன்று நாடு முழுவதும் ரூபாய் நோட்டு தட்டுப்பாடு பிரச்சினையால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். நிறைய ஏ.டி.எம்.கள் பணம் இல்லாமல் மூடிக்கிடக்கிறது.

100 ரூபாய் நோட்டுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. திறந்திருக்கிற ஏ.டி.எம்.களிலும் 2 ஆயிரம் நோட்டு தான் வருகிறது. இந்த பணத்தை மாற்றுவதற்கு மக்கள் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கினால் மீதி சில்லரை தருவதில் பிரச்சினை ஏற்படுகிறது.

தமிழ்நாட்டில் ஆட்சி நிர்வாகம் முடங்கி கிடக்கிறது. மக்களின் சிரமத்தை போக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பால் கருப்பு பணம் வைத்திருப் பவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக தெரியவில்லை. 80 சதவீத ஏழை மக்கள் தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வரும் வங்கியில் போட்ட பணத்தை எடுக்க படாதபாடு படுகிறார்கள். இந்த நிலை இன்னும் நீடிக்கிறது.

பிரதமர் மோடியின் அறிவிப்பை எதிர்க்கட்சி மாநில முதல்-மந்திரிகள் கடுமையாக எதிர்க்கின்றனர். நாட்டில் நிலவும் சிக்கலை போக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Similar News