செய்திகள்

மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு கம்யூனிஸ்டு 28-ந்தேதி ஆர்ப்பாட்டம்

Published On 2016-11-25 08:59 GMT   |   Update On 2016-11-25 10:12 GMT
மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு கம்யூனிஸ்டு 28-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் அறிவித்துள்ளனர்.
சென்னை:

இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், சி.பி.ஐ. (எம்.ஐ.) செயலாளர் குமாரசாமி, எஸ்.யு.சி.ஐ. செயலாளர் ரங்கசாமி ஆகியோர் இன்று சந்தித்து பேசினார்கள். பின்னர் அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததன் மூலம், மக்களின் மீது, குறிப்பாக விளிம்பு நிலையில் உள்ள மக்களின் மீது கடும் தாக்குதலைத் தொடுத்துள்ள மத்திய பா.ஐ.க. அரசுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் கிளர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளன.

முறையான முன் தயாரிப்பு எதுவும் மேற்கொள்ளாமல், மத்திய அரசு இந்த அறிவிப்பினைச் செய்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் கூட நிலைமை இன்னும் சீரடையவில்லை. செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளின் மதிப்பில் 10 சதவீதம் மட்டுமே வங்கிகளுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.

இதன் விளைவாக தங்களுடைய அன்றாடத் தேவைக்கு எவ்விதமான பணத்தையும் செலவு செய்ய முடியாமல் கோடிக்கணக்கான மக்கள் மிகவும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இத்தகைய சூழ்நிலையில் நிலைமை சீரடையும் வரை பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திட அனுமதிக்க வேண்டும். விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும். வங்கிகளில் செயல்படா சொத்துக்கள் என்றும் மாற்றியமைக்கப்பட்டுள்ள, பணக்காரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 11 லட்சம் கோடி ரூபாயையும் திரும்பப் பெற உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும். அவ்வாறு கடன் பெற்றவர்களின் சொத்துக்களை அரசுடமையாக்கிட வேண்டும்.

வெளிநாடுகளில் கணக்கு வைத்திருப்போர் பெயர்களை வெளியிட வேண்டும். அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நவம்பர் 28-ந் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்கள் மற்றும் முக்கிய மையங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு இடதுசாரி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து பகுதி மக்களும், வணிகர்களும், விவசாயிகளும், சிறு-குறு தொழில் முனைவோர்களும், ஜனநாயக எண்ணம் கொண்ட அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

Similar News