செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு: மத்திய அரசுக்கு திருமாவளவன் கண்டனம்

Published On 2016-10-03 07:59 GMT   |   Update On 2016-10-03 07:59 GMT
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்ததற்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்ததற்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்து மனுதாக்கல் செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த போக்கை விடுதலை சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது.

மத்திய அரசாங்கமே உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயல்படும் போது கர்நாடக மாநில அரசு எப்படி உச்சநீதிமன்றத்தை மதிக்கும்.

கர்நாடகத்திற்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் அரசியல் ஆதாயம் கருதி தமிழகத்திற்கு மத்திய அரசு மாபெரும் துரோகம் இழைக்கிறது.

அண்மையில் கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக நடந்த வன்முறையின் பின்னணியில் பாரதீய ஜனதாவின் சதி இருப்பதாக சொல்லப்பட்டது. அது உண்மைதான் என்று உறுதிப்படுத்துவது போல் மத்திய அரசின் தற்போதைய நிலைப்பாடு உணர்த்துகிறது.

மத்திய அரசின் வழக்கறிஞர், காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தற்போதைக்கு மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்றும், நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்து அமைக்கப்படும் என்றும் விவாதித்து இருப்பதாக தெரிகிறது. இது அரசியல் உள் நோக்கம் கொண்ட நிலைப்பாடாகும்.

மத்திய அரசு தனது நிலைப்பாட்டை உடனடியாக திரும்ப பெற வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்குமாறு விடுதலை சிறுத்தைகள் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News