செய்திகள்

காவிரி நீர் விவகாரம்: ஜெயலலிதா தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் திடீர் ஆலோசனை

Published On 2016-09-07 01:56 GMT   |   Update On 2016-09-07 11:30 GMT
காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் நிகழ்வுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
சென்னை:

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கு கர்நாடக மாநிலத்தில் விவசாயிகள் உள்பட பல்வேறு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அங்கு கன்னட அமைப்பினர் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். அரசியல் தலைவர்களின் உருவபொம்மைகளை எரித்து எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இதுபோன்ற போராட்டங்களால் கர்நாடகா-தமிழ்நாடு இடையே பஸ் உள்பட வாகன போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது. எனவே சட்டம் ஒழுங்கு பிரச்சினை எழக்கூடிய சூழ்நிலை உருவானது. கர்நாடக எல்லைப் பகுதிகள் மற்றும் கோவை, சேலம், ஈரோடு பகுதிகளில் பதற்றம் நிலவியது.

காவிரி தொடர்பான வழக்கு விசாரணையின் போது, காவிரி நதிநீர் பிரச்சினையில் கண்காணிப்புக் குழுவை ஏன் தமிழக அரசு அணுகவில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது. கண்காணிப்புக் குழுவை அணுகுவதற்கு ஆட்சேபனை இல்லை என்று தமிழக அரசு பதிலளித்திருந்தது.

இந்த சூழ்நிலையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்துக்கு வந்தார். உடனடியாக இந்த பிரச்சினை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகளை அழைத்தார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, வேலுமணி, பொதுப்பணித் துறை செயலாளர் பிரபாகர், மின்சார வாரியத் தலைவர் சாய்குமார், அட்வகேட் ஜெனரல் முத்துகுமாரசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவு, தற்போது இரண்டு மாநிலத்திலேயும் நிலவக்கூடிய சூழ்நிலை, பதற்றத்தைத் தணிக்கக் கூடிய ஏற்பாடுகள் ஆகியவை பற்றி ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

பிற்பகல் சுமார் ஒரு மணியளவில் கூடிய இந்த அவசர ஆலோசனைக் கூட்டம் சுமார் ஒரு மணிநேரம் நீடித்ததாக தலைமைச் செயலக வட்டாரம் தெரிவித்தது.

Similar News