பெண்கள் உலகம்
சுய மதிப்பை உயர்த்தும் உடல்மொழிகள்...

சுய மதிப்பை உயர்த்தும் உடல்மொழிகள்...

Published On 2022-05-27 03:39 GMT   |   Update On 2022-05-27 03:39 GMT
கல்லூரி, அலுவலகம், நேர்காணல் ஆகியவற்றில் நீங்கள் தனியொருவனாக மிளிர்வதும், கூட்டத்தில் ஒருவனாக மங்கிப் போவதும் உங்கள் உடல்மொழி வாயிலாகவே நிர்ணயிக்கப்படுகிறது.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அது போலத்தான் நாம் யார் என்பது நம் உடல் மொழியிலேயே தெரிந்து விடும். ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய உடல்மொழி என்பது தனித்துவமானது. ஒருவருடைய உடல்மொழியே அவரின் மனநிலையை எளிதாக வெளிப்படுத்தும். கல்லூரி, அலுவலகம், நேர்காணல் ஆகியவற்றில் நீங்கள் தனியொருவனாக மிளிர்வதும், கூட்டத்தில் ஒருவனாக மங்கிப் போவதும் உங்கள் உடல்மொழி வாயிலாகவே நிர்ணயிக்கப்படுகிறது. அதனால் உடல்மொழி பழகுங்கள். உங்களை தனித்துவமாக காட்டிக்கொள்ளுங்கள். அதற்கான சில வழிகாட்டல்கள் இதோ...

1. பேசிக்கொண்டிருக்கும் பொழுது உதட்டை குவிப்பது, தாடையை சொறிவது, மேலும் என்ன என்பது போல அவசரப்படுத்துவது போன்றவை உங்களுக்கு அந்த விஷயத்தில் ஆர்வமில்லை என்பதை காட்டி உங்கள் சக ஊழியரை, அலுவலக மேலதிகாரியை, கல்லூரி பேராசிரியரை சலிப்படையச் செய்யும். அதனால் இதுபோன்ற செயல்களை தவிர்த்து விடுங்கள்.

2. நீங்கள் எந்த அளவுக்கு நேர்மையானவர் என்பதை நேரடியாக கண்களைப் பார்த்து பேசுவதின் மூலம் சொல்லிவிட முடியும். மனிதனின் 70 சதவிகித தகவல் பரிமாற்றங்கள் சின்னச்சின்ன உடல்மொழிகளாலேயே பிறருக்கு கடத்தப்படுகின்றதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால் நேர்காணலில், கல்லூரி 'வைவா' உரையாடலில், அலுவலக சந்திப்பில் சம்பந்தப்பட்டவரின் கண்களை நேராக பார்த்தே பேசுங்கள்.

3. இடுப்பில் கை வைத்துக்கொண்டு நிற்பது உங்கள் பொறுமையின்மையையும், உங்களுக்கு அந்த உரையாடலில் உள்ள ஆர்வமின்மையையும் காட்டுவதாய் இருக்கும். அதனால் இடுப்பில் கை வைப்பதை மறந்துவிடுங்கள்.

4. நீங்கள் நின்று கொண்டிருக்கும் தோரணையும் உங்கள் உடல்மொழியை அழகாய் கடத்தும். நின்று கொண்டு பேசும்பொழுது பாதங்களின் திசையும் கூட நீங்கள் கிளம்ப தயாராக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்தும்.

5. அலுவலகத்தில் போலியாக புன்னகை செய்வதை தவிருங்கள். எதேச்சையாக கடந்து செல்கையில் வேறொரு மனநிலையில் இருந்துகொண்டு பிறரை பார்த்து புன்னகை செய்யும் பொழுது அது இயல்பானதாக இருக்காது. மனம் விட்டு சிரித்து உங்கள் இருப்பை பூர்த்தி செய்யுங்கள்.

6. நாம் எப்படி நம் கருத்தை எதிரில் இருப்பவர் காது கொடுத்து கவனிக்க வேண்டும் என நினைக்கிறோமோ, அது போலத்தான் பிறருக்கும் தோன்றும். உரையாடலின்போது பார்வையை வேறு பக்கம் செலுத்துவது, காதுக்குள் விரலை விட்டு எடுத்து அழுக்கு இருக்கிறதா என பார்ப்பது போன்றவையெல்லாம் நம் மீதான நம்பிக்கையை சுத்தமாக துடைத்துப் போட்டுவிடும். பிறருடனான உரையாடலில் கண்களைப் பார்த்து பேசிப் பழகுங்கள். அதன் பிறகு உங்கள் மீதான நம்பிக்கை பிறருக்கு கொஞ்சம் கொஞ்சமாக உயர்வதை உணர்வீர்கள். பிறருடைய உடல் அசைவுகளை பொறுத்தே நம்மை வெளிக்காட்டுவோம்.

தனியொருவனாக இருப்பதற்கும், கூட்டத்தில் ஒருவனாக கடந்து போவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது அல்லவா? மேலும் இதையெல்லாம் ஒரே நாளில் கடைப்பிடித்துவிட முடியாது தான். ஆனால் நம் உடலை, நாம் சொல்வதைத்தானே கேட்க வைக்க வேண்டும்...!
Tags:    

Similar News