லைஃப்ஸ்டைல்

கணவர் சொல்லும் பொய்யால் கோபமடையும் மனைவி

Published On 2017-12-28 08:36 GMT   |   Update On 2017-12-28 08:36 GMT
சில விஷயங்களை கணவன், மனைவியிடம் வெளிப்படையாக பேசாமல் இருப்பதும் பிரச்சினையாகிவிடும். கணவர் பேசும் பொய்களும் உறவில் விரிசலை உருவாக்கிவிடும்.
கணவன்-மனைவி உறவு பந்தம் வலுப்பெற இருவருக்கும் இடையே ஒளிவு மறைவு இருக்கக்கூடாது. இருந்தால், சந்தேகங்கள் அதிகரித்து நிம்மதியை கெடுத்துவிடும். சில விஷயங்களை கணவன், மனைவியிடம் வெளிப்படையாக பேசாமல் இருப்பதும் பிரச்சினையாகிவிடும். கணவர் பேசும் பொய்களும் உறவில் விரிசலை உருவாக்கிவிடும்.

திருமணத்திற்கு பிறகு நண்பர்களுடன் நேரத்தை செலவிட வேண்டும் என்பதற்காக மனைவியிடம் வேறு காரணங்களை கூறி பொய் சொல்லக்கூடாது. அப்படி பொய் சொல்லி விட்டு நண்பர்களை காண சென்று அதனை மறைக்க தெரியாமல் மாட்டிக்கொள்ளும்போது மனைவி உச்சக்கட்ட கோபத்துக்கு ஆளாகிவிடுவார். ஆரம்பத்திலேயே நண்பர்களுடன் நேரம் செலவளிப்பதை சொல்லிவிட்டால் தவறாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள். அதேவேளையில் நண்பர்களுடன் பொழுதை போக்குவதை குறைத்து கொள்ள வேண்டும் என்பது மனைவியின் விருப்பமாக இருக்கும் என்பதை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும்.



மனைவியின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்பட்டால் அதனை கணவர் வெளிப்படையாக கேட்டுவிட வேண்டும். விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும் என்பதற்காக எல்லாவற்றையும் சகித்துக்கொள்ள வேண்டியதில்லை. மனைவி செய்யும் விஷயங்கள் பிடிக்காமல் இருந்தால் அதை வெளிப்படையாக கூறுவதே நல்லது. ஆரம்பத்தில் சகித்துவிட்டு பின்னாளில் அதே சம்பவம் நடக்கும்போது மனைவி மீது கோபம் கொள்வதில் அர்த்தமில்லை.

மனைவியிடம் பிடித்தமான விஷயங்கள் எவை? பிடிக்காதவை எவை? என்பதை சந்தோஷமான மனநிலையில் இருக்கும்போது தெரியப்படுத்திவிடுங்கள். மனைவியின் தோற்றம் குறித்து விமர்சனம் செய்ய நினைத்தால் அதனை வெளிப் படையாக கூறிவிடுங்கள். பெண்கள் திருமணமான புதிதில் அலங்காரத்திற்கு கொடுத்த முக்கியத்துவம் குழந்தை பிறந்த பிறகு குறைந்துவிடும். அதனை நினைவூட்டுவதில் தவறில்லை. ‘குழந்தைக்கு செலவிடும் நேரத்துக்கு மத்தியில் கொஞ்ச நேரத்தையாவது உனக்கும் ஒதுக்கிக்கொள்’ என்று அன்பாக எடுத்துக்கூற வேண்டும். அதேவேளையில் மனைவி மனவருத்தம் கொள்ளும் விதத்தில் கணவரின் பேச்சு அமைந்துவிடக்கூடாது.

மனைவியிடம் சொல்லாமல் ரகசிய நடவடிக்கையில் கணவர் ஈடுபடக்கூடாது. மற்றவர்கள் மூலம் ரகசியம் மனைவியின் காதுகளை எட்டினால் அது அவரிடம் கோபத்தை உருவாக்கி விடும். அந்த நேரத்தில் வருத்தம் தெரிவித்து மனைவியை அமைதிப்படுத்துவதே சிறந்த வழி.
Tags:    

Similar News