லைஃப்ஸ்டைல்

ஈரப்பதத்தால் வீடுகளுக்குள் ஏற்படும் பாதிப்புகள்

Published On 2017-08-26 04:16 GMT   |   Update On 2017-08-26 04:16 GMT
பல வீடுகளில் மழை மற்றும் குளிர் காலங்களில் வீட்டிற்கு உள்ளே இருக்கும் ஈரப்பதம் எளிதில் உலராமல் கட்டிடங்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன.
காற்றும், சூரிய ஒளியும் எளிதாக நுழையும் வீடுகளில் ஆரோக்கிம் நிலவும் என்பது பொதுவான உண்மையாகும். பல வீடுகளில் மழை மற்றும் குளிர் காலங்களில் ஜன்னல்கள் திறக்கப்படுவதில்லை. அதன் காரணமாக, வீட்டிற்கு உள்ளே இருக்கும் காற்றில் ஈரப்பதம் அதிகமாகிறது. அதுபோன்ற சூழ்நிலைகளில் சரியான ‘வெண்டிலேஷன்’ செய்யப்படவில்லை என்றால் ஈரம் எளிதில் உலராமல் கட்டிடங்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

* வீட்டின் கூரைகள் மற்றும் சுவர்கள் ஆகியவற்றில் தொடர்ச்சியாக நீர் படிந்துகொண்டிருக்கும் பட்சத்தில் அந்த ஈரப்பதம் கட்டிடத்தை பாதிக்கிறது. மேலும், வீட்டின் கூரை மீது அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை தொட்டியில் நீர்க்கசிவு ஏற்பட்டாலும் கட்டிடத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

* மேல்நிலை தொட்டிகளில் பொருத்தப்பட்ட குழாய்கள் மூலம் தண்ணீர் வீடுகளின் வெவ்வேறு அறைகளுக்கு எடுத்துச்செல்லப்படும். அந்த குழாய்களில் நீர்க்கசிவு இருக்கும் பட்சத்தில் சுவர்களின் உள்ளே ஈரப்பதம் தங்கி சுவர் அரிப்பு ஏற்படுகிறது. அதன் காரணமாக சுவர்கள் படிப்படியாக உறுதியை இழக்கின்றன என்று வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள்.

* வீடுகளில் தினமும் புழங்கும் தண்ணீரின் குறிப்பிட்ட அளவு நீராவியாக வீட்டுக்குள் நிலவும் தட்ப வெப்பத்தில் தினமும் கலக்கிறது. தக்க முறையில் அந்த ஈரப்பதமானது வெளியேறாவிட்டால் சுவர்களுக்கு பாதிப்பு உண்டாகும். மேலும், குளியலறை மற்றும் சமையலறை ஆகியவற்றில் பயன்படும் தண்ணீரின் ஒரு பகுதியும் அந்த அறைகளில் உள்ள காற்றின் ஈரப்பதத்தை அதிகரிக்கிறது. எக்ஸ்ஹாஸ்ட் பேன்கள் பயன்படுத்தி அந்த ஈரப்பதத்தை வெளியேற்ற வேண்டும்.

* கட்டிடங்களின் அஸ்திவாரம் மற்றும் தரைத்தளம் ஆகியவற்றுக்கு இடையே தகுந்த அளவில் மண்ணை நிரப்பி, வீட்டின் ஈரப்பதம் அடித்தளத்திற்கு பரவாமல் தடுக்கவேண்டும். வீட்டின் அஸ்திவாரம் மற்றும் தரைத்தளம் ஆகிய இரண்டிற்கும் உள்ள இடைவெளியை தக்க மண்கொண்டு நிரப்புவதால், அஸ்திவாரம் ஈரப்பதத்தால் பாதிக்காமல் தடுக்கப்படுகிறது.

* மழை பெய்யும் சமயங்களில் கட்டிடத்தின் மீது விழக்கூடிய தண்ணீரை கவனமாக மழை நீர் சேகரிப்பு தொட்டிக்கு செல்லுமாறு செய்யவேன்டும். மழை நீர் நேரடியாக நிலத்திற்குள் சென்றால், கட்டிடத்தின் அஸ்திவாரம் அரிக்கப்படுவதோடு, கட்டிடத்திற்கு பாதிப்பையும் உண்டாக்குவதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
Tags:    

Similar News