லைஃப்ஸ்டைல்

விபத்துகளை தடுக்க தேவை விழிப்புணர்வு

Published On 2017-08-03 06:42 GMT   |   Update On 2017-08-03 06:42 GMT
வாகன ஓட்டுநர் தனக்குமுன் செல்லும் வாகனத்திற்கும், தனது வாகனத்திற்கும் குறிப்பிட்ட அளவு இடைவெளி இருக்குமாறு சென்றால், வண்டிகள் மோதிக் கொள்வதை தவிர்க்கலாம்.
இந்தியா உலகிலேயே அதிக சாலை போக்குவரத்து வசதிகளைக் கொண்ட இரண்டாவது பெரிய நாடாகும். சாலை விதிகள் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததால் பெரும்பாலான விபத்துகள் நிகழ்கின்றன. விபத்துகளில் காயமடைவதும், மரணங்களும் நிகழ்கின்றன. விபத்துகளை தடுப்பது நம் கைகளில்தான் இருக்கின்றன. அதற்கான சில வழிகளை அறிவோம்...

* இன்றைய காலகட்டத்தில் சாலை விபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எங்கும், எப்போது வேண்டுமானாலும் விபத்து நிகழலாம். அதிகரித்திருக்கும் வாகன பெருக்கத்தாலும், வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மீறுவதாலும் பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகின்றன என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

* இருசக்கர வாகனம் ஓட்டும்போது கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும். “மிதவேகம் மிக நன்று” என்பதை மனதில் கொண்டு மெதுவாக பயணம் செய்யுங்கள். தொடர்ச்சியாக நீண்ட தூரம் வாகனம் ஓட்டி பயணம் செய்வதை தவிருங்கள்.

* வாகன ஓட்டுநர்கள் சாலையின் இடது புறத்திலேயே வாகனங்களைச் செலுத்த வேண்டும். குறுக்குச்சாலை அல்லது பாதசாரிகள் கடக்கும் இடங்களில் வண்டியின் வேகத்தைக் குறைத்துச் செல்ல வேண்டும்.

* வாகனம் ஓட்டும்போது கண்டிப்பாக செல்போன் பேசுவதை தவிர்த்துவிடுங்கள். தவிர்க்க முடியாத சமயங்களில் சாலை ஓரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு பேசுங்கள்.

* செல்போன் பேசிக்கொண்டே சாலைகள், ரெயில்வே தண்டவாளத்தை கடப்பது ஆபத்தானது. இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பல வாகன ஓட்டிகள் நிதானமான வேகத்தை கடைப்பிடிப்பதில்லை. வேகமாக ஓட்டுவதால் அவர் களுக்கும், அதைவிட அதிகமாக பிறருக்கும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

* சாலை விதிகள் நமக்கு அல்ல, அடுத்தவர்களுக்குத்தான் என்கிற மனப்பான்மை பொதுவாக எல்லாரிடமும் இருக்கிறது. சாலை விதிகள் நம் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்டவை என்பதை அனைவரும் உணர வேண்டும். இதுவே விபத்துகளுக்கு வழி வகுக்கிறது.

* இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும்போது விளையாட்டாக பேசிக்கொண்டே போகாதீர்கள். தீயணைப்பு வாகனம், அவசர ஊர்தி மற்றும் ஆம்புலன்ஸ் வண்டி போன்றவைகளுக்கு வாகன ஓட்டுநர்கள் தடையின்றி வழிவிடுதல் அவசியமாகும்.

* வாகன ஓட்டுநர் தனக்குமுன் செல்லும் வாகனத்திற்கும், தனது வாகனத்திற்கும் குறிப்பிட்ட அளவு இடைவெளி இருக்குமாறு சென்றால், வண்டிகள் மோதிக் கொள்வதை தவிர்க்கலாம்.

*போக்குவரத்து விளக்குகளில் சிவப்பு விளக்கு எரிந்தால் நில், செல்லாதே என்றும், மஞ்சள் விளக்கு எரிந்தால் சாலையைக் கடக்கத் தயாராக இரு என்றும், பச்சை விளக்கு எரிந்தால் செல் என்றும் அறிவிக்கின்றது.

* சீக்கிரமாக குறித்த இலக்கினை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் வேகமாகச் செல்வது விபத்து நடக்க காரணமாகிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதும் பெரும்பான்மையான விபத்துகளுக்கு முக்கிய காரணமாகும்.

* 18 வயதிற்கு உட்பட்டவர்கள் இரண்டு சக்கர வாகனத்தையோ, நான்கு சக்கர வாகனத்தையோ ஓட்டுதல் கூடாது.

- மேலே கூறிய விதி முறைகளை முறைப்படி கடைப் பிடிப்பதன் மூலம் சாலை விபத்துகளை தவிர்ப்போம், உயிர்களை காப்போம்..!
Tags:    

Similar News