லைஃப்ஸ்டைல்

மாற்றம் ஏற்படுத்தும் மாற்று சிந்தனைகள்

Published On 2017-07-12 04:03 GMT   |   Update On 2017-07-12 04:03 GMT
மாற்றத்தை ஏற்படுத்தினால்தான் முன்னேற முடியும் என்பதை புரிந்து கொண்டு புதிய சிந்தனைகளை புகுத்திக்கொண்டே இருக்க வேண்டும். மாற்று சிந்தனைகள் மலர தொடங்கிவிடும்.
மாற்று சிந்தனைகள் மனதில் உதயமாகிக்கொண்டே இருக்க வேண்டும். வழக்கமான சிந்தனைகள் வாழ்க்கை பயணத்தை சுமுகமாக தொடர வழி வகுக்குமே தவிர வாழ்க்கையை மேம்படுத்த உதவாது. புதுமையை எதிர்பார்ப்பவர்கள் மனதில் நிச்சயம் மாற்று சிந்தனை மலரும். புதியனவற்றை விரும்புகிறவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபட தயங்கமாட்டார்கள். அதுவே விடா முயற்சியாக தொடர்ந்து எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்யும்.

மாற்று சிந்தனைகள் உருவாகுவதற்கு முதலில் உங்கள் மனநிலையை மாற்றி அமைக்க வேண்டும். ஒருபோதும் எதிர்மறை சிந்தனைகள் தோன்று வதற்கு இடம் கொடுக்கக்கூடாது. அதுபோல் எதிர்மறை சிந்தனைகள் கொண்டவர்களிடம் பழகுவதையும் தவிர்க்க வேண்டும். எந்தவொரு காரியத்தையும் தன்னால் செய்து முடிக்க முடியாது என்ற எண்ணம் தோன்றுவதற்கு இடம் கொடுக்க கூடாது.

எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் மனோபாவமும், மாற்று சிந்தனையும் கொண்டிருக்க வேண்டும். காலகாலமாக தொடர்ந்து வரும் நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்றுவதில் தவறில்லை. எனினும் கால மாற்றங்களுக்கு ஏற்ப அதிலும் புதுமையை புகுத்துவதற்கு மாற்று சிந்தனையே கைகொடுக்கும். வழக்கமான விஷயங்களில் மாற்றங்களை கொண்டு வந்தால் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற எதிர்மறை எண்ணங்கள் தோன்ற இடம் கொடுக்கக் கூடாது. அதில் இருக்கும் சாதக, பாதகங்களை அலசி ஆராய வேண்டும்.



மற்றவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து அதற்கேற்ப மாற்று முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அது நிச்சயம் பலன் கொடுக்கும். அதைவிடுத்து இதெல்லாம் வேண்டாத வேலை என்று ஒதுக்கி வைத்துவிடக் கூடாது. எதையும் மேம்போக்காக எடுத்துக்கொள்ளாமல் ஆழ்ந்து சிந்தித்து செயல்பட வேண்டும். புதிய முயற்சிகளில் பயமின்றி ஈடுபடவும் வேண்டும்.

அதற்கு மாற்று சிந்தனை கைக்கொடுக்கும். எந்தவொரு செயலை செய்வதாக இருந்தாலும் உடனே செய்து முடிக்கும் மனோபாவத்துக்கு மாற வேண்டும். புதிய சிந்தனைகள் மலரும்போது உடனே அதற்கு செயல்வடிவம் கொடுக்க முயல வேண்டும். ஏற்கனவே செயல்படுத்திவரும் வழக்கத்துடன் ஒப்பிட்டு பார்த்து அணுகுமுறையை சற்றே மாற்றி அமைக்க முயலவேண்டும்.

மாற்றத்தை ஏற்படுத்தினால்தான் முன்னேற முடியும் என்பதை புரிந்து கொண்டு புதிய சிந்தனைகளை புகுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அதற்காக மெனக்கெட வேண்டியதில்லை. வழக்கமாக செய்கின்ற வேலைகளை மாற்றி செய்வதற்கு முயற்சித்தாலே போதும். மாற்று சிந்தனைகள் மலர தொடங்கிவிடும்.
Tags:    

Similar News