லைஃப்ஸ்டைல்

மனக்கவலையை போக்க நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினையுங்கள்

Published On 2017-05-31 04:07 GMT   |   Update On 2017-05-31 04:07 GMT
மனக்கவலையை ஏற்படுத்தும் வகையில் சம்பவங்கள் நேர்ந்தால் மறக்கமுடியாத மகிழ்ச்சிகரமான தருணங்களை நினைத்துப் பார்த்து அசை போடுங்கள். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினையுங்கள்.
மன அழுத்தத்திற்கும் தூக்கத்திற்கும் தொடர்பு இருக்கிறது. சரிவர தூங்காமல் இருப்பது மன அழுத்தம் தோன்றுவதற்கு வித்திடும். குறைந்த பட்சம் ஆறு மணி நேர நிம்மதியான உறக்கம் அவசியம். அப்போது தான் மனம் சாந்தமாகி அதிகாலை பொழுதை புத்துணர்ச்சியோடு தொடங்க உடலை தயார்படுத்தும். நிம்மதியான உறக்கத்திற்கு உடலையும், மனதையும் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

தூங்க செல்வதற்கு முன்பும், அதிகாலை பொழுதும் மூச்சு பயிற்சி செய்வது சிறந்தது. ஆழமாக மூச்சை உள்இழுத்து, மெதுவாக வெளியே விட்டு முறைப்படி பயிற்சி மேற்கொள்ளும்போது உடலும், மனமும் தளர்வடைந்து இயல்பு நிலைக்கு திரும்பும். தினமும் குறைந்த பட்சம் 10 நிமிடங்களையாவது மூச்சு பயிற்சிக்கு ஒதுக்கிவர வேண்டும்.

அதனால் மனம் அமைதி அடையும். மன அழுத்தம் எட்டிப்பார்க்க இடம் கொடுக்காது. மூச்சு பயிற்சி மட்டுமின்றி வீட்டிலேயே மன அமைதி கிடைக்கும் சூழலை ஏற்படுத்த வேண்டும். பூஜை அறையிலோ அல்லது அமைதியான சூழல் நிலவும் இடத்திலோ சிறிது நேரம் அமர்ந்து மனதில் எந்த சிந்தனையும் தோன்றாதவாறு மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும்.

யோகா, தியானம் போன்ற பயிற்சிகள் செய்வதும் சிறந்தது. எந்தவொரு சூழ்நிலையிலும் உணர்ச்சிவசப்படக்கூடாது. கடும் கோபத்தை உண்டாக்கும் வகையில் பிறர் நடந்து கொண்டாலும் பொறுமையுடனும், சகிப்பு தன்மையுடனும் எதிர்கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஈடாக நீங்களும் ஆத்திரத்தை வெளிப்படுத்தினால் இருவருக்கும் இடையே தேவையில்லாத மனஸ்தாபம் உண்டாகி மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடும்.



மனக்கவலையை ஏற்படுத்தும் வகையில் சம்பவங்கள் நேர்ந்தால் மறக்கமுடியாத மகிழ்ச்சிகரமான தருணங்களை நினைத்துப் பார்த்து அசை போடுங்கள். அது மனதிற்கு உற்சாகம் தரும். இசை மீதும் கவனத்தை பதிக்கலாம். மனதிற்கு பிடித்தமான பாடல்கள் மனதை சாந்தப்படுத்தும். பாடலை கேட்பதோடு நீங்களும் சேர்ந்து பாடலாம். இன்னிசை இதய துடிப்பை சீராக்கும்.

ரத்த அழுத்தம், மன அழுத்தத்தை குறைக்கும். பதற்றத்தை போக்கி மனதை அமைதிப்படுத்தும். எதிர்மறை எண்ணங்களை போக்கி புத்துணர்ச்சி கொடுக்கும். மன அழுத்தத்திற்கான அறிகுறி தென்பட்டால் உடனே கவனத்தை வேறு விஷயங்களில் திசை திருப்பி விட வேண்டும். ஏனெனில் மன அழுத்தம் ஏற்படும்போது கார்ட்டிசால் எனும் ஹார்மோன் அதிகமாக சுரக்க தொடங்கும்.

அது மன அழுத்த பாதிப்பை அதிகப்படுத்தி விடும். அந்த ஹார்மோனை கட்டுப்படுத்த புன்னகைதான் சிறந்த மருந்து. நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும்போது கார்டிசால் ஹார்மோனின் சுரப்பு குறையும். நகைச்சுவை சினிமாக்கள், வீடியோக்களை பார்த்து மகிழலாம். நகைச்சுவை உணர்வு கொண்டவருடன் உரையாடலாம்.

செல்லப்பிராணிகளுடன் நேரத்தை செலவிடுவதும் மனக்கவலைகளை போக்கும். துள்ளி குதித்து உறவாடும் அதன் செயல்பாடுகளை ரசிக்கும்போது மனநிலை சீரடையும். தன்னம்பிக்கையை வளர்க்கும் புத்தகங்களை படிப்பதையும் வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். அவை எதிர்மறை எண்ணங்கள் தோன்ற இடம் கொடுக்காது நல்ல சிந்தனைகளை வளர்க்கும். மன நிலையை மேம்படுத்தும். உங்கள் நலனில் அக்கறை கொள்பவர்களிடம் மனம் விட்டு பேசலாம். எந்த விஷயத்துக்கும் தேவையில்லாமல் மனதை போட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினையுங்கள்.
Tags:    

Similar News