லைஃப்ஸ்டைல்
சாக்லேட், காபி

சாக்லேட், காபியை இனி மறக்க வேண்டியதுதான்?

Published On 2019-10-26 06:16 GMT   |   Update On 2019-10-26 06:16 GMT
சாக்லேட், மீன், உருளைக்கிழங்கு ஆகியவை பலருக்கும் பிடித்த உணவுகள். ஆனால், பருவநிலை மாற்றத்தின் காரணமாக வருங்காலத்தில் நாம் இவற்றை மறக்கவேண்டிய நிலை ஏற்படலாம் என எச்சரிக்கின்றனர் விஞ்ஞானிகள்.
சாக்லேட், மீன், உருளைக்கிழங்கு ஆகியவை பலருக்கும் பிடித்த உணவுகள். ஆனால், பருவநிலை மாற்றத்தின் காரணமாக வருங்காலத்தில் நாம் இவற்றை மறக்கவேண்டிய நிலை ஏற்படலாம் என எச்சரிக்கின்றனர் விஞ்ஞானிகள். காபியையும் டீயையும் கூட துறக்க வேண்டியிருக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

வெப்பநிலை மற்றும் வானிலையில் ஏற்படும் மாற்றங்களால், பயிர்கள் வளர்வதற்கு கடினமான சூழல் ஏற்பட்டுள்ளது. மீன்கள், விலங்குகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன.

எனவே எதிர்காலத்தில் நம் உணவு மேசையில் இருந்து பல உணவுப்பொருட்கள் காணாமல் போகக்கூடும்.

உணவுப்பொருட்களை மட்டுமல்ல, நம் வாழ்வோடு கலந்துவிட்ட காபி, டீயையும் மறக்க வேண்டியிருக்கலாம்.

பூமியின் பருவநிலை மாற்றத்தால், வருகிற 2050-ம் ஆண்டுக்குள் காபி பயிரிடப்படும் இடங்கள் பாதியாகக் குறையலாம். 2080-ம் ஆண்டுக்குள் சில காபி பயிர் வகைகள் முற்றிலுமாக அழிந்துபோகக்கூடும்.

காபி ஏற்றுமதியில் முக்கியப் பங்கு வகிக்கும் தான்சானியா நாட்டில், ஏற்கனவே கடந்த 50 வருடங்களில் அதன் விளைச்சல் பாதியாகக் குறைந்துள்ளது.

காபி இல்லாவிட்டால் பரவாயில்லை, டீக்கு மாறிவிடலாம் என்று நீங்கள் நினைத்தால் அதற்கும் அடி விழுகிறது. தேயிலைச் செடிகள் வளர்க்கப்படும் பகுதிகளில் காலநிலை மாறிவருவதால், அது தேயிலை சுவையை மாற்றுகிறதாம். எனவே டீ பிரியர்களும், அதிக நறுமணம் இல்லாத, அதிக நீர்த்தன்மை கொண்ட டீயைப் பருகத் தயாராக வேண்டும்.

சாக்லேட்டுக்கு மூலமான ‘கோகோ’வுக்கும் இதே நிலைதான். கோகோ காய் சாகுபடிக்கு, அதிகமான வெப்பமும், மிக அதிகமான ஈரப்பதமும் தேவை. அது நிலையானதாகவும் இருக்க வேண்டும்.

ஆனால், காலநிலை, மழை, மண்ணின் தரம், சூரிய ஒளி அல்லது காற்றின் வேகம் ஆகியவற்றில் ஏற்பட்டுவரும் மாறுபாடு, கோகோ விளைச்சலிலும் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கி இருக்கிறது.

இந்தோனேசியா மற்றும் ஆப்பிரிக்காவில் கோகோ பயிரிட்டுக் கொண்டிருந்த விவசாயிகள் பலரும் பாமாயில் மற்றும் ரப்பர் மரங்களை வளர்ப்பதில் திரும்பிவிட்டார்கள்.

அடுத்த 40 ஆண்டுகளில், கானா மற்றும் ஐவரி கோஸ்ட் நாடுகளின் சராசரி வெப்பநிலை 2 டிகிரி உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் கோகோ ஏற்றுமதியில் மூன்றில் இரண்டு பங்கு இந்த நாடுகளால் மேற்கொள்ளப்படுகிறது. எனவே அது சாக்லேட்டுக்கு ஆபத்தாக அமையும்.

ருசிக்கு உண்ணும் சாக்லேட் மட்டுமல்ல, அவசிய உணவுகளான மீன்களும், உருளைக்கிழங்குகளும்கூட இந்த ஆபத்தில்தான் உள்ளன.

பெருங்கடல்களில் ஆக்சிஜன் அளவு குறைந்துகொண்டு இருப்பது மீன்களின் பாதிப்புக்கு ஒரு காரணம். கார்பன் டையாக்சைடை உறிஞ்சிக்கொள்வதால் கடல்நீர் மேலும் மேலும் அமிலமயமாகிக் கொண்டிருக்கிறது. அது மீன்களின் வளர்ச்சியைப் பாதிக்கிறது. ஏற்கனவே சர்வதேச அளவில் மீன் பிடித்தல் 5 சதவீதம் குறைந்துள்ளது.

உருளைக்கிழங்கும் இப்பாதிப்பு பட்டியலில் வருகிறது. அது மண்ணுக்கு அடியில் விளைந்தாலும், அடிக்கடி ஏற்படும் வறட்சியால் அதன் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்படும் என மதிப்பிடப்படுகிறது.

கடந்த ஆண்டில் இங்கிலாந்தின் கோடைகாலத்தில் உருளைக்கிழங்கின் விளைச்சல் பாதிக்கும் மேல் குறைந்துவிட்டது. இந்நிலை உலகம் முழுக்க ஏற்படலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
Tags:    

Similar News