லைஃப்ஸ்டைல்

பட்டினியை விட உடல் பருமனே கேடு

Published On 2018-02-16 07:51 GMT   |   Update On 2018-02-16 07:51 GMT
உடற்பருமன் அதிகரிப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் பெரிய அளவில் எடுக்கப்படா விட்டால் இதன் காரணமாக இறப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும்.
உலகளாவிய அளவில் போஷாக்கின்மையால் 10 லட்சம் மக்கள் ஆண்டுதோறும் இறப்பதாக புள்ளிவிவரங்கள் காட்டி நிற்கின்றன. இதனைத் தடுப்பதற்கு பல விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் இந்த காலக்கட்டத்தில் உடல் பருமன் அதிகரிப்பால் ஆண்டுதோறும் 30 லட்சம் பேர் இறக்கின்றனர் எனும் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி இருக்கின்றது. உணவுப் பழக்க வழக்கங்கள் மாறுவதும் உடல் உழைப்பு குறைவதுமே இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. மரணத்திற்கான காரணங்களை ஒப்பிட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்காவில் போதிய உணவு இல்லாமல், பலர் குறைந்த காலத்திலேயே இறந்துபோவது தொடர்வதாக இந்த ஆய்வு எச்சரித்துள்ளது. தவிர உலக மக்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளது என்றாலும், அவர்கள் நோய்வாய்ப்படுகின்ற அளவு அதிகரித்துள்ளது என்று இந்த ஆய்வு காண்பிக்கிறது. இறப்புகளை ஏற்படுத்திய காரணங்களின் வரிசைப் பட்டியலில் நீரிழிவும், நுரையீரல் புற்றுநோயும் மேலே சென்றுள்ளன.

உடல் பருமன், அதனால் ஏற்படும் இதய நோய்களும் மரணத்திற்கான காரணத்தில் முன்வரிசையில் நிற்கின்றன. உயர் ரத்த அழுத்தம், புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்றவை உடல்நலப் பாதிப்புகளின் மிகப் பெரிய காரணியாக உருவெடுத்துள்ளன என்று பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் வயிற்றுப்போக்கு, காசநோய் போன்றவை இப்பட்டியலில் கீழிறங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே உடற்பருமன் அதிகரிப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் பெரிய அளவில் எடுக்கப்படா விட்டால் இதன் காரணமாக இறப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும் ஆபத்து காணப்படுகின்றது. மக்களிடையே நோயின் தாக்கங்கள் பற்றி உலக அளவில் இதுவரை இல்லாத மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் வெளியாகியிருக்கின்றன.

ஐந்து வருடகாலம் வேலைசெய்து தரவுகளை எல்லாம் ஒருங்கிணைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 500 ஆராய்ச்சியாளர்கள் பங்களிப்பு அளித்துள்ளனர்.
Tags:    

Similar News