லைஃப்ஸ்டைல்

பாக்கெட் உணவு... கவனிக்க வேண்டியவை...!

Published On 2017-12-18 08:03 GMT   |   Update On 2017-12-18 08:03 GMT
பாக்கெட் உணவு பொருட்கள் தரமானதா? என்பதை நம்மில் பலரும் ஆராய்வதில்லை. பாக்கெட் உணவில் கவனிக்க வேண்டியவற்றை பார்க்கலாம்.
கைக்குத்தல் அரிசியை சமைத்து சாப்பிட்ட நாம், இன்றைய அவசர யுகத்தில் பாக்கெட் உணவு பொருட்களை தான் பெரிதும் சார்ந்து இருக்கிறோம். ஆனால், பாக்கெட் உணவு பொருட்கள் தரமானதா? என்பதை நம்மில் பலரும் ஆராய்வதில்லை. 

மாறாக, அவற்றின் சுவையை மட்டும் பார்க்கிறோம். பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள உணவுப்பொருட்களின் பெயர், தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி, பேட்ஜ் நம்பர், லாட் நம்பர், உணவுப்பொருளில் கலந்துள்ள பொருட்களின் பெயர், அந்த உணவுப்பொருளில் இடம்பெற்றுள்ள புரதம், வைட்டமின் சத்து அளவுகள், எடை அளவு போன்றவற்றை பார்த்து வாங்க வேண்டும். 

மேலும், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டால் அந்த நாட்டின் பெயர் உள்ளதா? என்பதை கவனிக்க வேண்டும். சைவ உணவாக இருந்தால் பாக்கெட்டில் பச்சை வண்ண புள்ளியை சுற்றி சதுர வடிவ கட்டம் இடம்பெற்று இருக்கும். அதுவே அசைவ உணவாக இருந்தால் சதுர வடிவ கட்டத்துக்குள் காவி நிற புள்ளி இருக்கும். உணவு பொருளில் முட்டை சேர்க்கப்பட்டு இருந்தால் கூட அதில் காவி நிற புள்ளி இடம்பெற்று இருக்கும்.

முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது பாக்கெட்டுகளில் உள்ள உணவு பொருட்களின் தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதியைத்தான். சில நிறுவனங்கள் இந்த தேதிகளை ஸ்டிக்கரில் அச்சிட்டு பாக்கெட்டுகளில் ஒட்டி வைத்து விற்பனை செய்கிறார்கள். இது காலாவதியான உணவு பொருட்களையும் தேதியை மாற்றி மார்க்கெட்டில் விற்பனை செய்வதற்கு வழிவகை செய்யும். அதனால் முடிந்த வரை ஸ்டிக்கர் ஒட்டி தேதி குறிப்பிட்டுள்ள பாக்கெட்டில் உள்ள உணவுப்பொருட்களை தவிர்ப்பது நல்லது.

பால் பாக்கெட்டுகளில் உபயோகிக்கும் நாள் என்று ஒரு தேதியை குறிப்பிட்டு இருப்பார்கள். அந்த நாள் வரை தான் பாலை பயன்படுத்த வேண்டும். அதிகபட்சமாக பாக்கெட்டில் அடைக்கப்பட்டதில் இருந்து 3 நாட்களுக்குள் அந்த பாலை பயன்படுத்த வேண்டும். இனிப்பு, கார வகைகளில் நிறங்கள் சேர்க்கப்படுகிறது. 10 பி.பி.எம். அளவு வரை மட்டுமே உணவுப்பொருட்களில் நிறங்கள் சேர்க்க வேண்டும். ஜாங்கரி, ஜிலேபி, ரோஸ்மில்க் உள்ளிட்டவைகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவு நிறத்தையே சேர்க்க வேண்டும். ஒட்டுமொத்தத்தில் பாக்கெட் உணவுகளை பார்த்து வாங்குங்கள்.

-கோமதிராஜன், திருப்பூர்.
Tags:    

Similar News