லைஃப்ஸ்டைல்

மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் உணவுகள்

Published On 2017-11-22 03:10 GMT   |   Update On 2017-11-22 03:10 GMT
சிலவகை உணவு பதார்த்தங்களை அன்றாடம் உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் மன அழுத்தத்திற்கான அறிகுறிகளை கட்டுப்படுத்த முடியும்.
மன அழுத்தம் பெண்களின் ஆயுட்காலத்தை குறைத்து விடும் ஆபத்து கொண்டது. மனநலத்தை சீராக பராமரிப்பதில் உணவுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. சிலவகை உணவு பதார்த்தங்களை அன்றாடம் உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் மன அழுத்தத்திற்கான அறிகுறிகளை கட்டுப்படுத்த முடியும். அத்தகைய உணவுகளை பார்ப்போம்.

* வைட்டமின் டி குறைபாடு இருப்பவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மனநிலையும் சீராக இல்லாமல் தடுமாறிக்கொண்டிருக்கும். உணவில் காளான்கள், முட்டை, சோயா பால் ஆகியவற்றை சேர்த்துக்கொள்வதன் மூலம் வைட்டமின் டி சத்துக்களை பெற முடியும்.

* கார்போஹைட்ரேட் உள்ளடங்கிய உணவு வகைகளை சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நரம்புத் தளர்ச்சி, கவலை, தூக்கமின்மை போன்றவற்றிற்கு கார்போஹைட்ரேட் குறைபாடு முக்கிய காரணமாக இருக்கிறது. முழு தானியங்கள், புழுங்கல் அரிசி போன்றவை கார்போஹைட்ரேட் நிரம்பப்பெற்றவை. அவைகளை அன்றாட உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

* பீன்ஸ், சோயா, பருப்புகள், இறைச்சிகள், பருப்பு வகைகள், பன்னீர் போன்ற புரத சத்து நிறைந்த உணவுகளையும் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது மூளைக்கும், மன நலனுக்கும் புத்துணர்வு அளிக்கும்.



* மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் செர்ரி பழ வகைகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. திராட்சை, செர்ரி பழங்கள், கீரைகள் போன்றவற்றை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.

* ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவு பதார்த்தங்கள் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கவும், மனச்சோர்வை குறைக்கவும் உதவுகின்றன.

* மதிய உணவில் வெண்ணெய் சேர்த்து கொள்வது நல்லது. அதிலிருக்கும் நல்ல கொழுப்பு, மூளை வேகமாக செயல்பட துணைபுரியும்.

* காளான்கள் மன ஆரோக்கியத்திற்கு நல்லவை. ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கவும் உதவுகிறது. நல்ல மனநிலையை ஊக்குவிக்கும் உணவு பட்டியலில் வெங்காயமும் இடம்பிடித்திருக்கிறது. வெங்காயத்தையும், இஞ்சியையும் உணவில் சேர்ப்பது புற்றுநோய் பாதிப்பில் இருந்து காக்கவும் உதவுகிறது.

* தக்காளி பழத்தில் போலிக் அமிலம் மற்றும் ஆல்பா- லிபோயிக் அமிலம் ஆகியவை அதிகம் உள்ளன. இவை இரண்டும் மனச்சோர்வுக்கு எதிராக போராடும் வல்லமை படைத்தவை. தக்காளி பழத்தை சாலட்டுகளாக மற்ற காய்கறிகளுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.

* பீன்ஸை உணவில் சேர்த்து கொள்வது இதயத்திற்கு நல்லது. மனநலனுக்கும் நன்மை சேர்க்கும்.
Tags:    

Similar News