வழிபாடு

சுயம்பு வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

Published On 2022-07-23 04:54 GMT   |   Update On 2022-07-23 04:54 GMT
  • ராமநாதபுரம் ஊருணி கரையில் அமைந்துள்ளது சுயம்பு வராஹி அம்மன் கோவில்.
  • ஏராளமான பெண் பக்தர்கள் தீப விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோச மங்கை கிராமத்தில் ஊருணி கரையில் அமைந்துள்ளது சுயம்பு வராஹி அம்மன் கோவில். மிகவும் சக்தி வாய்ந்த இந்த சுயம்பு வராஹி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தை மற்றும் ஆடி வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதிலும் வராஹி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நேர்திக்கடன் செலுத்துவதற்காக அம்மியில் மஞ்சள் அரைத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்ய கொடுத்து விட்டு தரிசனம் செய்வது வழக்கம்.

இந்த நிலையில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையான நேற்று உத்தரகோசமங்கை கிராமத்தில் உள்ள சுயம்புவராஹி அம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய குவிந்தனர். இவ்வாறு வந்த ஏராளமான பெண் பக்தர்கள் கோவில் முன்பு வரிசையாக வைக்கப்பட்டு இருந்த அம்மியில் மஞ்சள் அரைத்து அதை அம்மனுக்கு அபிஷேகம் செய்ய கொடுத்தனர்.

பெண் பக்தர்களோடு ஆண் பக்தர்களும் சேர்ந்து அம்மியில் மஞ்சள் அரைத்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் கோவிலில் ஏராளமான பெண் பக்தர்கள் தீப விளக்கேற்றி தரிசனம் செய்தனர். ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி வராஹிஅம்மனுக்கு நேற்று காலை பால், பன்னீர், திரவியம், மஞ்சளால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை பூஜை நடைபெற்றது.

வராஹிஅம்மன் கோவிலில் நேற்று நடந்த அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜையில் ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து வந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதேபோல் ராமேசுவரம் தனுஷ்கோடி செல்லும் சாலையில் உள்ள நம்புநாயகி அம்மன் கோவிலிலும் நம்புநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News