வழிபாடு

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நாளை தேரோட்டம்

Published On 2022-06-10 07:22 GMT   |   Update On 2022-06-10 07:22 GMT
  • 12-ந்தேதி அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.
  • தேர் நிலைக்கு நின்றதும் பகல் 12 மணிக்கு அன்னதானமும் காஞ்சி தர்மமும் நடக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம்,பகவதி அம்மன் கோவில் உலகப்புகழ் பெற்றகோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாட்கள் விசாக பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பெருந்திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா வருகிற 12-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

திருவிழவையொட்டி தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் 11-30 மணிக்கு அலங்கார தீபாராதனையும் பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானமும் மாலை 6 மணிக்கு சமய உரையும் இரவு 7 மணிக்கு இன்னிசை கச்சேரியும் 9 மணிக்கு அம்மன் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலாவரும் நிகழ்ச்சியும் நடந்துவருகிறது. 9-ம் திருவிழாவான நாளை காலையில் தேரோட்டம் நடக்கிறது. காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் திருத்தேர் வடம் தொட்டு இழுத்து தேரோட்டம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

இதில் தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோதங்கராஜ் தேர் வடம் தொட்டு இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கிறார். தேர் நிலைக்கு நின்றதும் பகல் 12 மணிக்கு அன்னதானமும் காஞ்சி தர்மமும் நடக்கிறது. மாலை 6-30 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும் இரவு 7-30 மணிக்கு தேவார இன்னிசையும் 8-45 மணிக்கு பக்தி பஜனையும் 9 மணிக்கு வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் நடக்கிறது.

10-ம் திருவிழாவான 12-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும் இரவு 8 மணிக்கு நர்த்தன பஜனையும் நடக்கிறது. 9 மணிக்கு தெப்பத்திருவிழா நடக்கிறது. நள்ளிரவு 11 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

Tags:    

Similar News