வழிபாடு

ஆவணி மூல திருவிழா: உலவாக்கோட்டை அருளிய சுந்தரேசுவரர்

Published On 2022-09-03 04:42 GMT   |   Update On 2022-09-03 04:42 GMT
  • சிறப்பு அலங்காரத்தில் சுந்தரேசுவரர்-பிரியாவிடை, மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
  • சுவாமி பூத வாகனத்திலும், அம்மன் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதிகளில் வலம் வந்தனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் 5-வது நாளான நேற்று காலை உலவாக் கோட்டை அருளிய லீலை நடந்தது. அப்போது சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் உலவாக் கோட்டை அருளிய லீலை அலங்காரத்தில் காட்சி அளித்தனர். பின்னர் இரவு சுவாமி பூத வாகனத்திலும், அம்மன் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி ஆவணி மூல வீதிகளில் வலம் வந்தனர்.

விழாவில் உலவாக் கோட்டை அளித்த லீலை குறித்த புராண வரலாறு வருமாறு:-

அடியார்க்கு நல்லார் என்ற ஒரு அடியார் மதுரையில் தினமும் சிவனடியார்களுக்கு உணவளித்த பிறகே உண்பது என்ற கொள்கை உடையவராக இருந்தார். அவரது செல்வம் குறைந்த போதும் கடன் பொற்றாவது தனது கடமையை ஆற்றி வந்தார். கடனும் கிடைக்காத நிலையில் அவர் வருந்தினார். இந்தநிலையில், தனது மனைவியுடன் சோமசுந்தரரை தரிசித்து பின் உயிர் துறப்பது என நினைத்து கோவிலுக்கு சென்றார்.

அவரது தருமநெறியின் உண்மை நிலை கண்ட இறைவன் அசரீரியாக தோன்றி வீட்டிற்கு செல். அங்கே உனக்காக அள்ள அள்ள குறையாத நெல்மணிகளை கொண்ட உலவாக் கோட்டை ஒன்றை அளித்துள்ளோம் என்று கூறினார். அதன்படியே இருவருக்கும் வீடு திரும்பி உலவாக் கோட்டை மூலம் கிடைத்த நெல்மணிகளை கொண்டு கடைசி காலம் வரை சிவனடியார்க்கு உணவளித்து வாழ்ந்தனர் என்று புராணம் கூறுகிறது.

Tags:    

Similar News