வழிபாடு

கள்ளழகர் கோவில் ஆடி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2022-08-05 04:25 GMT   |   Update On 2022-08-05 04:25 GMT
  • வருகிற 12-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
  • 14-ந்தேதி உற்சவ சாந்தியுடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது.

மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடி பெருந்திருவிழா விமரிசையாக நடைபெறும்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஆடி பெருந்திருவிழா நடக்கவில்லை. ஆனால் இந்த ஆண்டு திருவிழாவை கோலாகலமாக நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.

நேற்று காலை 8.45 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆடி பெருந்திருவிழா தொடங்கியது. இதையொட்டி தங்க கொடிமரத்துக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பிரமாண்ட மாலையும் கொடிமரத்துக்கு அணிவிக்கப்பட்டது. கருடன் உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. இதைதொடர்ந்து நூபுரகங்கை தீர்த்தத்தினால் அபிஷேகம், தீபாராதனை நடந்தன.

உற்சவர் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத கள்ளழகர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அங்குள்ள மண்டபத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கொடியேற்ற விழாவில் துணை ஆணையர் ராமசாமி, மேலூர் தொகுதி எம்.எல்.ஏ. பெரிய புள்ளான், தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், உபயதாரர்கள், கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இரவில் அன்னவாகனத்தில் பெருமாள் புறப்பாடு நடைபெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் தங்கப்பல்லக்கிலும், மாலையில் சிம்ம வாகனத்திலும் கள்ளழகர் புறப்பாடு நடைபெறும்.

6-ந் தேதி மாலையில் அனுமன் வாகனத்திலும், 7-ந் தேதி மாலை கருட வாகனத்திலும், 8-ந் தேதி காலை 6.45 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் கள்ளழகர் கோவிலில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு மதுரை சாலையில் உள்ள மறவர் மண்டபத்திற்கு சென்று எழுந்தருளும் நிகழ்வு நடக்கிறது.

அன்று மாலையில் சேஷ வாகனத்தில் காட்சி தருகிறார். 9-ந் தேதி மாலையில் யானை வாகனத்திலும், 10-ந் தேதி மாலையில் புஷ்ப சப்பரத்திலும் பெருமாள் காட்சி தருகிறார். 11-ந் தேதி மாலையில் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருள்கிறார்.

முக்கிய நிகழ்ச்சியாக 12-ந் தேதி அதிகாலை 4.15 மணிக்கு மேல் 4.35 மணிக்குள் தேவியர்களுடன் பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருள்கிறார். இதைதொடர்ந்து காலை 6 மணியிலிருந்து 6.30 மணிக்குள் தேரோட்டம் தொடங்குகிறது. இரவில் பூப்பல்லக்கு விழா நடக்கிறது.

13-ந் தேதி மாலையில் புஷ்ப சப்பரம், 14-ந் தேதி உற்சவ சாந்தியுடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது.

ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News