வழிபாடு

மலைப்பாதை வழியாக சதுரகிரி கோவிலுக்கு செல்லும் பக்தர்களை படத்தில் காணலாம்.

ஆடி அமாவாசை: வருசநாடு மலைப்பாதை வழியாக சதுரகிரி செல்லும் பக்தர்கள்

Published On 2022-07-28 05:58 GMT   |   Update On 2022-07-28 05:58 GMT
  • தாணிப்பாறை வழியாக செல்வது மட்டுமே அங்கிகரிக்கப்பட்ட பாதையாக உள்ளது.
  • பக்தர்களுக்கு சமூக ஆர்வலர்கள் அன்னதானம் வழங்கி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு ஆடி அமாவாசை தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வருவது வழக்கம். இந்த கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக செல்வது மட்டுமே அங்கிகரிக்கப்பட்ட பாதையாக உள்ளது. ஆனால் ஆடிஅமாவாசை தினத்தன்று தேனி மாவட்டம், வருசநாடு அருகே உள்ள உப்புத்துறை பகுதியில் இருந்து மலைப்பாதை வழியாக ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள்.

அந்த வகையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு வருசநாடு மலைப்பாதை வழியாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு நடைபயணமாக செல்ல தொடங்கியுள்ளனர்.

உப்புத்துறை பகுதியில் இருந்து சுமார் 23 கி.மீ.தூரம் கரடு முரடான மலைப்பாதையில் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் நடந்து செல்கின்றனர். இந்த வனப்பகுதி புலிகள் காப்பமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மலைப்பாதை வழியாக செல்லும் பக்தர்கள் கடுமையான சோதனைக்கு பின்னர் கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்து செல்ல வனத்துறையினர் அனுமதித்துள்ளனர்.

இந்த மலைப்பகுதியில் 3 இடங்களில் முகாமிட்டுள்ள வனத்துறையினர் பக்தர்கள் கொண்டு வரும் பைகளை சோதனை செய்து, பிளாஸ்டிக் பைகள், தீப்பெட்டி, பத்தி, சூடம், நெய்விளக்கு போன்றவற்றை பறிமுதல் செய்துவிட்டு நடந்து செல்ல அனுமதிக்கின்றனர். வனத்துறையினர் கடும் கட்டுப்பாடுகளை விதித்தாலும் சதுரகிரி மகாலிங்கத்தை தரிசனம் செய்தால் போதும் என்ற மனநிலையில் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழியாக செல்லும் பக்தர்களின் நலனுக்காக சில சமூக ஆர்வலர்கள் 4 நாட்களுக்கு தொடர்ந்து அன்னதானமும், மருத்துவ சேவையும் இலவசமாக வழங்கி வருகின்றனர்.

Tags:    

Similar News