கொரோனா பரவலால் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டதால் காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் மர சப்பரத்தில் முருகன், வள்ளி தெய்வானையுடன் வலம் வந்தார். அப்போது கோவிலுக்கு வெளியே நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஆனால் வழக்கம் போல் சாமிக்கு நடைபெறும் சிறப்பு அலங்காரம், பூஜைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 14-ந் தேதி தொடங்கியது.
விழா நாட்களில் சாமிக்கு தினமும் நடைபெறும் அபிஷேக ஆராதனையும், பூஜைகளும் நடந்தன. நேற்று முன்தினம் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. தைப்பூச நாளான நேற்று தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. ஆனால் காலையில் வழக்கம் போல் சிறப்பு அபிஷேகமும், மாலை 3 மணி அளவில் கோவில் வளாகத்தில் மர சப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகபெருமான் கோவிலை வலம் வந்தார். மூலவர் கந்தசாமிக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. விழா தொடர்ந்து 21-ந் தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் தொடர்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனையும், பூஜைகளும் நடக்கிறது.
வழக்கமாக தைப்பூச தேர்த்திருவிழாவுக்கு சேலம், நாமக்கல் மாவட்ட மக்கள் ஏராளமானவர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்வர். பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து இருந்தனர். அவர்கள் கோவிலுக்கு வெளியே நின்று சாமி தரிசனம் செய்தனர். அந்த பக்தர்களுக்கு உணவும், தண்ணீர் பாட்டிலும் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் பி.எல்.செல்வகுமார், செயல் அலுவலர் முருகன் ஆகியோர் செய்து இருந்தனர்.