ஆன்மிகம்
சுடலை ஆண்டவர்

சிறுமளஞ்சி ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா தள்ளிவைப்பு

Published On 2021-08-25 07:21 GMT   |   Update On 2021-08-25 07:21 GMT
கொரோனா பரவல் காரணமாக அரசின் தடை உத்தரவு முடிவுக்கு வந்தவுடன் கோவில் விழாவுக்கான தேதி அறிவிக்கப்பட்டு கொடை விழா நடைபெறும்.
நெல்லை மாவட்டம் சிறுமளஞ்சியில் பிரசித்தி பெற்ற ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வது வழக்கம். ஒவ்வொரு தமிழ் மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெறும். இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை ஆவணி மாதம் 3-ம் வெள்ளிக்கிழமை கோவில் கொடை விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி முதல் நாள் வியாழக்கிழமை அன்று கும்பாபிஷேகமும் சிறப்பு பூஜையும், 2-ம் நாள் வெள்ளிக்கிழமை தீர்த்தம் எடுத்து வருதல், பால்குடம் எடுத்து வருதல், பாலாபிஷேகம், சுவாமி அழைப்பு, அலங்கார தீபாராதனை, சுவாமி மயானம் சென்று வருதல், தொடர்ந்து ஆடு கோழி போன்றவைகள் பலியிட்டு பொங்கலிட்டு பக்தர்கள் வழிபடுவது வழக்கமாகும்.

இந்த ஆண்டு ஆவணி கொடை விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 2-ந் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசு பல்வேறு ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பித்து நடைமுறையில் இருந்து வருகிறது. ஆகையால் அரசின் உத்தரவு காரணமாக கோவில் கொடை விழாவானது இந்து நாடார் சமுதாய நிர்வாக கமிட்டியின் ஒருமித்த முடிவின்படி தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்படுகிறது.

கொரோனா பரவல் காரணமாக அரசின் தடை உத்தரவு முடிவுக்கு வந்தவுடன் கோவில் விழாவுக்கான தேதி அறிவிக்கப்பட்டு கொடை விழா நடைபெறும். மேலும் கோவிலில் வழக்கமாக தினமும் காலை 9.30 மணிக்கும், வெள்ளி செவ்வாய், ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 7.30 மணிக்கும் பூஜைகள் நடைபெறும் என்று சிறுமளஞ்சி இந்து நாடார் சமுதாயத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News