ஆன்மிகம்
ஆன்மிக கதை

அபிநந்தனும்.. பந்த பாசமும்..ஆன்மிக கதை

Published On 2020-06-30 10:10 GMT   |   Update On 2020-06-30 10:10 GMT
பாசப்பிணையில் இருந்து விடுவித்து, துறவியாக்கி ஞானம் அடைய வழிகாட்ட வேண்டும் என்று வந்த அபிந்தாவுக்கு புத்தர் கூறிய அறிவுரையை அறிந்து கொள்ளலாம்.
புத்தர் தங்கியிருந்த அந்த இடம், போதி வனமாக காட்சியளித்தது. அந்த வனத்தில் இருந்த ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தார், புத்தர். அவரைச் சுற்றி தெய்வீக ஒளி தோன்றியது. மரங்கள் அசைவதால் ஏற்பட்ட சலசலப்பைத் தவிர, அங்கு வேறு எந்த சத்தமும் இல்லை.

அப்போது புத்தரை தரிசிப்பதற்காக நடுத்தர வயதைக் கொண்ட ஒருவர் வந்தார். புத்தர் தியானத்தில் இருப்பதைப் பார்த்த அவர், புத்தரின் தியானத்தை கலைத்துவிடாதபடி மிகவும் எச்சரிக்கையாக அவர் முன்பாகப் போய் அமர்ந்தார். எதாவது பேசினாலோ, செய்தாலோ தியானம் கலைந்து விடும் என்பதால், புத்தராகவே கண் திறக்கும்வரை அங்கேயே காத்திருப்பது என்று முடிவு செய்தார்.

நேரம் கடந்துகொண்டே இருந்தது. அந்த நாள் முடியும் நேரத்தில்தான் கண்களைத் திறந்து பார்த்தார், புத்தர். தன் முன்பாக ஒருவர் அமர்ந்திருப்பதைக் கண்டதும், “மகனே.. நீ யார்?” என்று கேட்டார்.

வந்திருந்தவரோ, “சுவாமி.. என்னுடைய பெயர் அபிநந்தன்” என்று பதிலளித்தார்.

“சொல் அபிந்தா.. என்னை பார்க்க எதற்காக வந்தாய்? என்னால் உனக்கு ஆக வேண்டிய காரியம் என்ன?” என்று கேட்டார், புத்தர்.

“புத்த பெருமானே.. நான் ஒரு ஏழை. எனக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இதுநாள் வரை என்னுடைய வாழ்வில் பல துன்பங்களைக் கண்டவன். அதன் பயனாக எனக்கு உலக வாழ்க்கையில் இருந்த பற்று நீங்கிவிட்டது. எனவே தாங்கள் என்னை பாசப்பிணையில் இருந்து விடுவித்து, துறவியாக்கி ஞானம் அடைய வழிகாட்ட வேண்டும்.”

அபிநந்தனின் வார்த்தைகளைக் கேட்டதும் புத்தர் யோசனை வயப்பட்டார். பிறகு அபிநந்தனிடம், “இங்கிருக்கும் மரங்களின் இலைகள் அசைவதற்கு என்ன காரணம் தெரியுமா? காற்றுதான். அது இலைகளின் மீது மோதி அசைவை உண்டாக்குகிறது. மனித மனமும் இலைகளைப் போன்றதுதான். உலக ஆசைகள் என்னும் காற்று மனித மனதின் மீது மோதுவதால், அது ஆடுகின்றது, அலைபாய்கின்றது. முதலில் என்னுடைய கேள்விக்கு பதில் சொல்.. உன்னால் உலக பந்த பாசங்களில் இருந்து முற்றாக விலகிவிட முடியுமா?” என்றார்.

அதற்கு அபிநந்தன், “சுவாமி.. என்னால் உலகப் பற்றை முற்றிலுமாக துறந்துவிட முடியும்” என்று பதிலளித்தார்.

“சரி.. இன்று முதல் நீ இந்த போதி வனத்தில் தங்கியிரு.. சில காலம் ஆனதும், உன்னுடைய உலகப் பற்று எப்படியிருக்கிறது என்று நான் பார்க்கிறேன்” என்று கூறி அபிநந்தன் தங்குவதற்கான ஏற்பாடுகளை புத்தர் செய்தார்.

சில நாட்கள் கடந்தன. ஒருநாள் புத்தர் அருகில் இருக்கும் நதியில் நீராடச் சென்றார். வழியில் அபிநந்தன் ஒரு நாயுடன் நின்று கொண்டிருந்தார்.

அதுபற்றி புத்தர் கேட்டதும், “சுவாமி.. இது எனது நாய்க்குட்டி. என்னை விட்டு பிரிந்திருக்க முடியாமல், என்னைத்தேடி வந்துவிட்டது. இதை மட்டும் என்னுடன் வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்” என்றார்.

புத்தர் சிரித்தபடியே அங்கிருந்து சென்று விட்டார்.

மற்றொரு நாள், முன்பு போலவே நதியில் நீராடச் சென்றார் புத்தர். அப்போது அபிநந்தன் மற்றும் நாய்க்குட்டியுடன் ஒரு சிறுவனும் இருந்தான். புத்தர் அந்தச் சிறுவனைப் பற்றி அபிநந்தனிடம் கேட்டார்.

அதற்கு அவர், “புத்த பெருமானே.. இந்தச் சிறுவன் என்னுடைய மகன். இவனால் இந்த நாய்க்குட்டியை பிரிந்து இருக்க முடியவில்லை. அதனால் இவனையும் என்னுடனேயே தங்கியிருக்க நீங்க அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டார்.

இப்போதும் புத்தரின் முகத்தில் சிரிப்பு மட்டுமே உதிர்ந்தது. ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து சென்று விட்டார்.

மேலும் சில நாட்கள் சென்ற நிலையில், புத்தர் நதிக்கு நீராடச் சென்றார். இப்போது அதே நதிக்கரையில் அபிநந்தன், அவரது மகன், நாய்க்குட்டியுடன் ஒரு பெண்ணும் நின்றிருந்தாள். அதுகண்ட புத்தர், அந்தப் பெண் பற்றி அவரிடம் விசாரித்தார்.

அபிநந்தனோ, “சுவாமி.. இவள் என் மனைவி. இவளால் என் மகனைப் பிரிந்திருக்க முடியவில்லை. எனவே இவளும் இங்கு என்னுடன் தங்க அனுமதிக்க வேண்டும்” என்றார்.

புத்தர் சிரித்துக் கொண்டே, அங்கிருந்த இரண்டு காலி பாத்திரங்களை எடுத்தார். ஒரு பாத்திரத்தில் கற்களை நிரப்பி தண்ணீரில் விட்டார். அது மூழ்கிவிட்டது. மற்றொரு பாத்திரத்தை காலியாகவே நீரில் விட்டார். அது மூழ்காமல் மிதந்துகொண்டே இருந்தது. இப்போது புத்தர் சொன்னார். “பார்த்தாயா அபிநந்தா.. கனமான பாத்திரம் நீரில் மூழ்கியது. காலி பாத்திரம் மிதக்கிறது. கனமான பாத்திரம் என்பது பந்தபாசங்களைப் போன்றது. அது பிறவித் துன்பம் என்னும் கடலில் மூழ்கிப்போகும். காலிப் பாத்திரம் என்பது ஞானப் பாத்திரம். அது பிறவித் துன்பங்களில் மூழ்காமல் மிதக்கும். உன் மனதில் இன்னும் உலகப்பற்று இருக்கவே செய்கிறது. பந்த பாசங்கள் உள்ளது. எனவே நீ துன்பங்களை அனுபவித்தே தீர வேண்டும். நீ இங்கிருந்து செல்லலாம்” என்று கூறி விட்டு அங்கிருந்து அகன்றார்.
Tags:    

Similar News