search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Buddha"

    • ‘இதுவும் கடந்து போகும்’ என்பதே புத்த மந்திரம்.
    • மனிதர்களால் துன்பத்தைத் தவிர்க்க முடியாது.

    5.5.2023 புத்த பூர்ணிமா

    புத்த பகவானுக்குரிய ஆறு அற்புத ஆற்றல்கள்

    1. இந்திரிய பரேபரியட்ட - ஐந்து ஆன்மிக திறன்களின் மூலம் கட்டுப்படுத்தும் கொள்கை.

    2. அசயானுஸயா - உயிரினங்களின் இயல்புகள் மற்றும் அடிப்படையான மனப்பாங்கு பற்றிய அறிவு.

    3. யமகபதிஹர - புத்த பகவான் சாவத்தியில் நிகழ்த்திய இரட்டை அற்புதங்கள்.

    4. மகாகருண சமபத்திய - உயர்ந்த கருணையை அடைதல்.

    5. சப்பனுத்த - சர்வ ஞானத்தினை அறிதல்.

    6. அனவரன - தடையற்ற தன்மை பற்றிய அற்புத ஆற்றல்

    கி.மு. 6-ம் நூற்றாண்டில் இமயமலைப்பகுதி அருகில் அமைந்துள்ள நேபாளத்தில் (அன்றைய சாக்கிய குடியரசு) கபிலவஸ்து, லும்பினி தோட்டம், சாலமரத்தடியில், சாக்கிய மன்னர் சுத்தோதனருக்கும், மகாராணி மகாமாயாதேவிக்கும் பிறந்தவர், சித்தார்த்த கவுதமர். மகாமாயாதேவி பிரசவத்திற்காக தன் பெற்றோர் இருப்பிடம் செல்லும் வழியில், லும்பினி தோட்டத்தில் சாலமரத்தின் கிளையை பிடித்தவாறே அவருக்கு குழந்தைப் பிறக்கிறது. அந்தக் குழந்தையான சித்தார்த்த கவுதமர் புனித பிறப்பு எடுத்தவுடன் ஏழு காலடிகள் எடுத்துவைத்தார் என்றும், அந்த ஏழு காலடியிலும் அழகிய தாமரை மலர்கள் மலர்ந்ததாகவும் பவுத்த நூல்கள் கூறுகின்றன.

    சமண மரபில் பிறந்த இளவரசர் சித்தார்த்த கவுதமர் சிறுவயதிலிருந்தே தியானத்தில் ஈடுபடுவது, உயிர்கள் மீது கருணை காட்டல், மனித குலத்தின் துன்பத்தைப் பற்றிய ஆழ்ந்த சிந்தனை, அவற்றிலிருந்து விடுபடுவதற்கான வழிகள் என்ற வகையிலான ஆன்மிகத்தேடல் போன்றவை வளர்ந்து கொண்டே இருந்தது. இளவரசர் சித்தார்த்த கவுதமர் தனது 29-வது வயதில் மனிதகுலத்தின் துன்பத்துக்கான காரணங்களை தேடி சுகபோக வாழ்க்கையைத் துறந்து, அரண்மனையில் இருந்து வெளியேறி உயரிய துறவு பூண்டார். பலயோக, தியான முறைகளை அறிந்து குறுகிய காலத்தில் உயர்நிலை தேர்ச்சி அடைந்தார்.

    பிறகு பீகாரில் உள்ள கயாவில் ஆலமரத்தடியில் உடலை வருத்திக்கொண்டு, உணவு உண்ணாமல் நீண்ட நாட்கள் கடுமையான தியானத்தில் ஈடுபட்டார். இதனால் உடல் மிகவும் நலிவடைந்தது. ஒருநாள் அந்த இடத்திலுள்ள மரத்தைச் சுற்றி வழிபட வேண்டுதலுக்காக, தன் தோழியுடன் வந்த சுஜாதா என்ற பெண்மணி, மரத்தடியில் போதி சத்த சித்தார்த்தர் தியான நிலையில்அமர்ந்திருப்பதைக் கண்டு, அவரையே மரத்தின் கடவுளாக நினைத்து, படைப்பதற்காக எடுத்து வந்த சுவையான பால்சாதத்தை போதி சத்தவராகிய சித்தார்த்தருக்கு வழங்கினார். அவரும் தன்னுடைய பிண்ட பாத்திரத்தில் அந்த சாதத்தைப் பெற்று உண்டார். அதை சாப்பிட்டதும் நலிவடைந்திருந்த அவரது உடல் புத்துணர்வு பெற்றது.

    மெய்ஞானம் அடைவதற்கு உடல் ஆரோக்கியம் முக்கியம் என்றும், உடலை வருத்திக்கொள்வதும், அதிக இன்பத்தில் திளைப்பதும் தவறானது என்றும் சிந்தித்து, இரண்டுக்கும் இடைப்பட்ட மத்திய மார்க்கத்தை உணர்ந்தார். அதன்பின் பீகாரில் உள்ள புத்தகயா, போதி மரத்தடியில் (அரசமரம்) ஆழ்ந்த தியானம் இருந்து உடலாலும், மனதாலும் முழு தூய்மை நிலையை அடைந்து, விருப்பு, வெறுப்பில்லாத உள்ளச் சமநிலையுடன் விழிப்புணர்வு நிலை அடைந்து, 35-வது வயதில் 'புனித ஸம்மா ஸம் புத்தர்' (யாருடைய உதவியுமின்றி முழுமையாக மெய்ஞானமடைதல்) ஆனார்.

    உயர் மெய்ஞானமடைந்தபிறகு அந்த புனித இடத்திலேயே 49 நாட்கள் தன் மெய்ஞான நிலையை எண்ணி பேரின்ப நிலையை அடைந்தார்.

    அந்த பேரின்ப நிலையின் மூலமாக 'நிலையானது என்று ஒன்றும் இல்லை, உலகில் ஒவ்வொரு உயிருக்கும் நிரந்தரமான தனித்தன்மையுடைய ஆன்மா என்று ஒன்றில்லை' என்பனவற்றை உணர்ந்தார். ஒருவரின் செயல்வினைக்கு ஏற்ப மாறிக்கொண்டிருக்கும் உணர்வுநிலை (விஞ்ஞானம் - உயிர்சக்தி - சித்தம் - மனம்) மூலம் உயிர்கள் மறுபிறப்பு எடுக்கின்றன. உணர்வு என்பது தொடர்வரிசையாக உண்டாகும் உணர்வுகள். ஒவ்வொரு உணர்வும் கடல் அலைகள் போன்று தோன்றி மறையும் தன்மை கொண்டது.

    மரணம் ஏற்பட்டபின் இந்த வாழ்க்கையின் கடைசி உணர்வு தோன்றி மறைகிறது. ஆனால் பேதமையின், செய்கையின் சக்திகளால் இந்த வாழ்வின் கடைசி உணர்வு, அடுத்த வாழ்வின் முதல் உணர்வை தாயின் கருப்பையில் கருத்தரிக்கப்பட்ட கருவோடு சேர்க்கிறது. இப்படி புதிய தோற்றம் உண்டாகிறது. புதிய தோற்றத்தை தொடங்கும் முதல் உணர்வு, முன்பிறவி செய்கைகளின் சார்பில் தோன்றியது. அந்தச் செய்கைகளே அதற்கு உருவம் தருகின்றன. கருத்தரிக்கப்பட்ட கணத்தில் தோன்றும் முதல் உணர்வு 'மறு இணைப்பு உணர்வு' என்பதாகும். தோன்றிய அனைத்தும் ஒருநாள் மறைந்துபோகும். அனைத்தும் கணத்துக்கு கணம் மாறிக்கொண்டே இருக்கின்றன. மாற்றம் ஒன்றே மாறாதது. ஒன்றைச் சார்ந்துதான் மற்றொன்று இயங்குகிறது. காரணமின்றி எதுவும் தோன்றுவதில்லை. சார்பில்லாமல் எதுவும் இருப்பதில்லை என்பதையும் அறிந்தார்.

    பிறகு 45 வருடம், தான் பெற்ற மெய்ஞானத்தை, பிக்குகள் சங்கம் அமைத்து, நான்கு உன்னத வாய்மைகள் மற்றும் எண் வழிப் பாதை மூலமாக மனிதகுலம் மேன்மை நிலைபெற ஆன்மிக தம்ம உபதேசம்செய்து, தியான முறைகளையும், வாழ்க்கை நெறிமுறைகளையும் அனைவருக்கும் போதித்தார்.

    நான்கு உன்னத வாய்மைகள்:

    1. துன்பம் (துக்கம்) வாழ்க்கையில் உள்ளது. மனிதர்களால் துன்பத்தைத் தவிர்க்க முடியாது. பிறப்பு, நோய், முதுமை, இறப்பு ஆகியவை மனிதருக்குத் துன்பத்தைத் தருபவை. பசி, பகை, கொலை, வெகுளி, இழப்பு, மயக்கம் போன்றவையும் துன்பம் தருபவையே.

    2. துன்பத்திற்கு காரணம் உள்ளது. (துக்க சமுதாயம், ஆசை அல்லது பற்று)

    3. துன்பம் ஒழிக்கப்படக்கூடியது. (துக்க நிரோதம்)

    4. துன்பத்தை ஒழிக்க வழி உள்ளது. (துக்க நிரோத காமனீபடிபதா).

    துன்பத்தை நீக்கி பேரின்ப நிலைக்கு கொண்டுசெல்லும் எண் வழிப்பாதை:

    1. நல்லுணர்வு, 2. நல்நினைவு, 3. நல்லுரை, 4. நற்செயல், 5. நல்வாழ்க்கை, 6. நன்முயற்சி, 7. நற்கடைப்பிடி, 8. நல்ஒழுக்கம்

    இப்படி அறியாமை என்னும் இருளை நீக்கி விழிப்புணர்வு என்ற ஒளியை மக்களின் மனங்களில் பரவச் செய்தார்.

    சுஜாதா கொடுத்த சுவையான பால் சாதமும், இறுதியாக சுந்தன் கொடுத்த பன்றிக் காளானும், உயர் மெய்ஞானம் அடைவதற்கும், பிறவி இல்லாத பேரின்ப நிலையை அடைவதற்குமான புத்த பகவானின் வாழ்வில் இரண்டு முக்கிய உணவுகளாக அமைந்தன.

    தனது 80-வது வயதில் உத்தரபிரதேசம், குசி நகரில் தனது சீடர்கள், மன்னர்கள், சகல தேவர்கள் சூழ சாலமரத்தடியில் மகாபரிநிப்பாணம் (பிறவியில்லா பேரின்ப நிலை) அடைந்தார்.

    புத்த பகவான் பிறந்ததும், பிறவி இல்லாத பேரின்ப நிலையை அடைந்ததும் சால மரத்தடியில் தான். தேவர்களுக்கும், மக்களுக்கும் போதகரான உலகை உய்வித்த சம்மாசம் புத்த பகவானை வணங்குவோம்.

    உலகில் ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம், அமைதி நிலவ, நம் அனைவருக்கும் புத்த பகவான் என்றைக்கும் தேவைப்படுகிறார். புத்தரை தினமும் வழிபட்டு, சுத்தாக்களை படித்து, அவர் அருளிய தம்மத்தையும், தியானத்தையும் பயிற்சி செய்வதன் மூலம் மனதில் நல்ல எண்ணங்கள் தோன்றும். அந்த எண்ணங்களின் வாயிலாக நல்ல செயல்கள் உருவாகும். நல்ல செயல்கள், வளமான வாழ்வு, உடல்நலம், மன அமைதி ஆகியவற்றைப் பெற்றுத்தந்து, நம்முடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

    'இதுவும் கடந்து போகும்' என்பதே புத்த மந்திரம்.

    புத்தரின் அற்புத ஆற்றல்கள்

    புத்த பகவான் தனது மெய்ஞானத்தின் மூலம் 73 வகையான அற்புத ஆற்றல்களைக் கொண்டிருந்தார். அதில் முக்கிய அற்புத ஆற்றல்கள்:

    1. இத்ஹீவித - மந்திரஆற்றல்: 31 உலகங்களையும் தனது அதீத ஆற்றலால் அறிந்தவர். தண்ணீரில் நடத்தல், காற்றில் பறத்தல், மலைகளைக் கடந்து செல்லல், கண்ணுக்குத் தெரியாமல் மீண்டும் தோன்றி ஓர் உடலைப் பலவாகவும், பலவற்றை ஒன்றாகவும் மாற்றுதல்.

    2. திப்பசோத - அதிசய காது: விண்ணுலகிலும், மண்ணுலகிலும் நிகழும் நுட்பமான ஒலிகளைக் கேட்டல்.

    3. திப்பசக்கு - ஞானக்கண்: ஓரிடத்தில் இருந்துகொண்டே ஞானக்கண்ணால் உலகில் உள்ள அனைத்து இடங்களையும், உயிர்களையும் பார்த்தல்.

    4. சிட்டோபரியஞான - மற்றவர்களின் மனதை ஊடுருவி அறிதல்.

    5. புப்பேநிவாசானுஸ்ஸதி - முற்பிறவிகளையும் அறிதல்.

    6. ஆசவக்காய - மன அசுத்தங்களை நீக்குதல்.

    -வி.சந்திரசேகர், சென்னை.

    சந்திரவள்ளியில் உள்ள மலைகளில் குகைகளும், கோவில்களும் அதிகளவில் உள்ளன. அங்குள்ள குகைகளில் ஒரு காலத்தில் புத்த துறவிகள் வாழ்ந்ததாக கண்டறியப்பட்டு உள்ளது.
    சித்ரதுர்காவில் இருந்து வடகிழக்கு பகுதி நோக்கி 4 கிலோமீட்டர் தூரம் சென்றால் சந்திரவள்ளி என்ற இடம் உள்ளது. இங்கு தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட பானைகள், கிண்ணங்கள், கழிவுநீர் கால்வாய்கள், செங்கல்கள், கற்களின் படங்களும், சதவகானா, ஒய்சாலா, விஜயநகர் ஆட்சி காலத்தில் புழக்கத்தில் இருந்த நாணயங்களும் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அங்கு மனிதர்கள் வாழ்ந்ததை உறுதிப்படுத்துவதாக உள்ளன.

    மேலும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அகஸ்டர் சீசஸ் காலத்தைய ரோமன் நாணயங் களும், சீன நாணயங்களும் கண்டறியப்பட்டு உள்ளன. சந்திரவள்ளியில் உள்ள மலைகளில் குகைகளும், கோவில்களும் அதிகளவில் உள்ளன. அங்குள்ள குகைகளில் ஒரு காலத்தில் புத்த துறவிகள் வாழ்ந்ததாக கண்டறியப்பட்டு உள்ளது.

    அந்த குகைகளை குடியிருப்புகள், தியான அறைகள், பார்வையாளர்கள் அரங்கங்களாக அவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். அந்த பழமைவாய்ந்த குகைகள் 80 அடி ஆழம் கொண்டவை என்பதால், அங்கு செல்ல விரும்புபவர்கள் டார்ச் லைட் மற்றும் மெழுகுவர்த்தியை கையில் எடுத்து செல்வது நல்லது. 
    ×