ஆன்மிகம்
திருப்பரங்குன்றம் கோவில்

திருப்பரங்குன்றம் கோவில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2020-01-27 06:06 GMT   |   Update On 2020-01-27 06:06 GMT
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் 10 நாட்கள் தெப்பத்திருவிழா நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் 10 நாட்கள் தெப்பத்திருவிழா நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 11 மணியளவில் உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மேலும் விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதனையடுத்து அவர் சன்னதியில் இருந்து கம்பத்தடி மண்டபத்திற்கு தெய்வானையுடன் சிம்மாசனத்தில் அமர்ந்து மேளதாளங்கள் முழங்க புறப்பட்டு எழுந்தருளினார். இதனைத்தொடர்ந்து சுவாமி அருள் பார்வையில் தங்கமுலாம் பூசப்பட்ட கம்பத்தில் 16 திரவியங்கள் கொண்டு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்தோர் பக்தி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து 4-ந் தேதிவரை விழா நடைபெறுகிறது.

தினமும் இரவில் வெவ்வேறு விதமான வாகனங்களில் சாமி எழுந்தருளி நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

வருகிற 3-ந்தேதி காலையில் ஜி.எஸ்.டி. ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்பம் முத்து தள்ளுதல் நிகழ்ச்சி நடக்கிறது அதன்பின் தை கார்த்திகையையொட்டி தேரோட்டம் நடக்கிறது. இதில் 16 கால் மண்டபத்தில் இருந்து நகரின் நான்கு முக்கிய வீதிகளில் தேர் வலம் வருகிறது. சிகர நிகழ்ச்சியாக 4-ந் தேதி தெப்பஉற்சவம் நடக்கிறது. அன்று கோவிலில் இருந்து தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி புறப்பட்டு தெப்பக்குளத்தில் எழுந்தருளுகிறார். பிறகு தெப்பக்குளத்தில் தயாராகும் தெப்பம் மிதவையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அங்கு பக்தர்கள் திரண்டு இருந்து மிதவையில் இணைக்கப்படும் வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்கிறார்கள். இதேபோல காலையில் 3 முறை வடம் பிடித்து இழுக்கிறார்கள். மீண்டும் இரவில் மின்னொளியில் தெப்பக்குளத்தில் தெப்பம் மிதவை வடம்பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
Tags:    

Similar News