ஆன்மிகம்
திருப்பதி

திருப்பதியில் பிப்ரவரி 1-ந்தேதி ரத சப்தமி விழா

Published On 2020-01-23 08:02 GMT   |   Update On 2020-01-23 08:02 GMT
ரத சப்தமி அன்று ஒரே நாளில் உற்சவர் ஏழுமலையான் தனித்தும், உபய நாச்சியார்களுடன் சேர்ந்தும் 7 வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் ஏழுந்தருளி கோவிலின் 4 மாடவீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
திருமலை- திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மை செயல் அலுவலர் தர்மாரெட்டி திருமலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 1564-ம் ஆண்டில் இருந்து ரத சப்தமி விழா நடந்து வருவதாக கோவில் வரலாற்று பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரத சப்தமி அன்று ஒரே நாளில் உற்சவர் ஏழுமலையான் தனித்தும், உபய நாச்சியார்களுடன் சேர்ந்தும் 7 வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் ஏழுந்தருளி கோவிலின் 4 மாடவீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இதை மினி பிரம்மோற்சவம் என்றும் அல்லது சூரிய ஜெயந்தி விழா என்றும் அழைப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான ரத சப்தமி விழா வருகிற 1-ந்தேதி நடக்கிறது.

அதைத் தொடர்ந்து பல்வேறு வாகன வீதிஉலா நடக்கிறது. அதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருமலையில் பக்தர்கள் வாகன சேவையை பார்த்து வழிபட கோவிலின் 4 மாடவீதிகளில் உள்ள கேலரிகளில் ஜெர்மன் செட் எனப்படும் நிழற்பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.

அதில் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகிறது. அன்று கோவிலில் அதிகாலை சுப்ரபாத சேவை, தோமால சேவை, அர்ச்சனை சேவை பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது.

கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்த உற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகிறது.

அத்துடன் கைக்குழந்தையுடன் வரும் பெண் பக்தர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது. அசம்பாவித சம்பவம் நடக்காமல் இருக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். 
Tags:    

Similar News