ஆன்மிகம்
விநாயகர்

நின்ற கோலத்தில் விநாயகர்

Published On 2019-11-22 06:55 GMT   |   Update On 2019-11-22 06:55 GMT
அனைத்து கோவில்களிலும் விநாயகர் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிப்பார். ஆனால், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் விநாயகர் நின்ற கோலத்தில் தரிசனம் செய்யலாம்.
நாம் எந்த காரியங்களை தொடங்கினாலும் விநாயகரை வழிபட்டுதான் தொடங்குகிறோம். விநாயகரின் ஆசியோடு நமக்கு எல்லா வளமும் கிடைக்கிறது. இதனால் விநாயக பெருமானை முதற்கடவுள் என்று வழிபட்டு வருகிறோம். அனைத்து கோவில்களிலும் விநாயகர் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிப்பார். ஆனால், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் விநாயகர் நின்ற கோலத்தில் தரிசனம் செய்யலாம்.

பார்வதிதேவி குளிக்க செல்லும் போது விநாயகரை காவலுக்கு நிற்க சொல்லி விட்டு சென்றார். உட்கார்ந்தால் தூங்கி விடுவார் என்று எண்ணிய அன்னை விநாயகரை நின்று கொண்டே இருக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதனை ஏற்றுக்கொண்ட விநாயகர் அந்த இடத்தில் நின்று கொண்டே காவல் காத்தார். அதனால் இந்த கோவிலில் விநாயகர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

கோவிலின் நுழைவு வாசலில் அம்மனுக்கு இடதுபுறத்தில் இந்த விநாயகரை நாம் தரிசிக்கலாம். 2 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளார். பக்தர்கள் கோவிலுக்கு சென்றவுடன் முதலில் இந்த விநாயகரைதான் வழிபட்டு செல்கிறார்கள். காரணம், இந்த விநாயகர் அவ்வளவு சக்தி படைத்தவராக அருள்பாலிக்கிறார்.

இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலை இந்த விநாயகரிடம் வைத்து செல்கிறார்கள். அவர்களுக்கு நினைத்த காரியத்தை விநாயகர் நிறைவேற்றி வருவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

இந்த விநாயகருக்கு தினமும் பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி உள்பட முக்கிய விழாக்களின் போது சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலிப்பார். விநாயகரை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அவருக்கு உகந்த அருகம்புல் மாலை, வெள்ளெருக்கு மாலை உள்பட பலவித பூக்களை அணிவித்து வழிபட்டு செல்கிறார்கள்.
Tags:    

Similar News