ஆன்மிகம்
அன்னாபிஷேகத்தில் பிரகதீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

கங்கைகொண்ட சோழபுரத்தில் 100 மூட்டை பச்சரிசி சாதத்தால் பிரகதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம்

Published On 2019-11-12 02:58 GMT   |   Update On 2019-11-12 02:58 GMT
கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரருக்கு 100 மூட்டை பச்சரிசி சாதத்தால் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்டவரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் ராஜேந்திர சோழனால் கலைநயத்துடன் பிரமாண்டமாக கட்டப்பட்டது. தற்போது இந்த கோவில் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த கோவிலை இந்து சமய அறநிலைய துறையினர் நிர்வகித்து வருகின்றனர். உலக புராதன சின்னங்கள் அடங்கிய பட்டியலை வெளியிடும் யுனெஸ்கோ அமைப்பினர் இந்த கோவிலை புராதன சின்னமாக அறிவித்து உலக சுற்றுலா வரைபடத்தில் இடம்பெற செய்து பெருமைப்படுத்தியுள்ளனர். அதனால் இந்த கோவிலுக்கு வெளிநாடுகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத பவுர்ணமி அன்று இந்த கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு இக்கோவிலில் உள்ள 62 அடி சுற்றளவும், 13½ அடி உயரமும் உள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு காஞ்சி சங்கராமட நிர்வாகிகள் சார்பில் 35-வது ஆண்டாக நேற்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக காஞ்சி சங்கராமட நிர்வாகி விஜயேந்திரர் அன்னாபிஷேகத்தை தொடங்கி வைத்தார். இதையொட்டி நேற்று காலை 100 மூட்டைகளில் இருந்த 2,500 கிலோ எடை கொண்ட பச்சரிசியை 6 நீராவி அடுப்புகளில் சமைத்தனர். பின்னர் மாலை 5 மணி வரை அன்னாபிஷேக பணிகள் நடந்தன.

இதில் சமைக்கப்பட்ட சாதத்தை நூற்றுக்கணக்கான சிவாச்சாரியார்கள் மூங்கில் கூடைகளில் சுமந்து சென்று சிவலிங்கத்தின் மீது சாத்தி அன்னாபிஷேகம் செய்தனர். பின்னர் சிவலிங்கத்தின் மீது காய்கறிகள், பழங்கள், பலகாரங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு, பிரமாண்ட மாலை அணிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மாலை 6.45 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. இதில் லிங்கத்தின் மீது சாத்தப்படும் ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையை பெறுவது என்றும், ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.

இந்த அன்னாபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று பிரகதீஸ்வரரை தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News