ஆன்மிகம்
தல்லாகுளத்தில் தெப்பத்திருவிழா நடந்தபோது எடுத்தபடம். (உள்படம்: சிறப்பு அலங்காரத்தில் தேவியருடன் பெருமாள்)

தல்லாகுளம் பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா

Published On 2019-10-11 04:52 GMT   |   Update On 2019-10-11 04:52 GMT
தல்லாகுளம் பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலின் உபகோவில் மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள்கோவில். இந்தகோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் புரட்டாசி மாதம் நடைபெறும் பிரமோற்சவ விழா தனி சிறப்புடையதாகும்.

இந்த விழா கடந்த மாதம் 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதை தொடர்ந்து தினமும் அன்னம், சிம்மம், ஆஞ்சநேயர், கருடன், சேஷ, யானை, குதிரை போன்ற வாகனங்களிலும் கிருஷ்ணர், ராமர் போன்ற அவதாரங்களிலும், பூப்பல்லக்கிலும், தேரோட்டத்திலும் எழுந்தருளி பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா நேற்று நடந்தது. இதற்காக கால்வாயில் இருந்து தண்ணீர் கொண்டுவரப்பட்டு தெப்பகுளம் முழுமையாக நிரப்பிவைக்கப்பட்டு இருந்தது. அதில் அன்னபல்லக்கு வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு நிறுத்தப்பட்டடு இருந்தது. ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத வெங்கடாஜலபதி பெருமாள் பல்லக்கில் எழுந்தருளினார். காலை 10.45 மணிக்கு மேளதாளம் முழங்க பரிவாரங்களுடன் தெப்பத்தில் அன்னப்பல்லக்கு வலம் வந்தது. அப்போது தெப்பத்தை சுற்றி நின்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மேற்கு பக்கம் உள்ள மண்டபத்தில் சாமி எழுந்தருளினார். தொடர்ந்து மாலையில் மறுபடியும் தெப்ப உற்சவம் நடந்தது. அப்போது வண்ண விளக்குகளால் அங்கு அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

இதிலும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.இன்று (வெள்ளிக்கிழமை) உற்சவ சாந்தியுடன் இந்த பிரமோற்சவ புரட்டாசி திருவிழா நிறைவுபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள் திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News