ஆன்மிகம்

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம்

Published On 2019-06-13 04:37 GMT   |   Update On 2019-06-13 04:37 GMT
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரமோற்சவ விழாவையொட்டி, தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலக புகழ்மிக்க தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு தனி சன்னதி கொண்டு சனி பகவான் அருள்பாலித்து வருகிறார். சனிக்கிழமை மற்றும் சனிப்பெயர்ச்சியின் போது ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்த கோவிலின் முக்கிய திருவிழாவான பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் சாமி-அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடந்தது. விநாயகர், வள்ளி சமேத சுப்பிரமணியர், செண்பக தியாகராஜர், நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 தேர்களின் தேரோட்டம் ஒன்றன்பின் ஒன்றாக இழுத்து வரப்பட்டது. தேரோட்டத்தில், புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன், மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜா, கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சாமிகள், நிர்வாக அதிகாரி சுந்தர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

முன்னதாக, அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் கோவில் சார்பில் பரிவட்டம் கட்டப்பட்டது. 5 தேர்களும் கோவிலின் 4 வீதிகளை சுற்றி வந்து மாலையில் நிலையை அடைந்தது. நாளை (வெள்ளிக்கிழமை) தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.
Tags:    

Similar News