ஆன்மிகம்
தியாகராஜர் உற்சவ மூர்த்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் 12-ந்தேதி தேர் திருவிழா

Published On 2019-06-08 05:39 GMT   |   Update On 2019-06-08 05:39 GMT
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் வருகிற 12-ந் தேதி நடக்கிறது.
காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலக அளவில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனி பகவான் தனியாக சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மேலும் இந்த கோவில் சனிதோஷ நிவர்த்திக்கு பிரசித்திபெற்ற பரிகார தலமாக விளங்கி வருகிறது. இங்கு சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சி விழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்த கோவிலில் பிரம்மோற்சவம் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த மாதம் (மே) 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வரும் உற்சவம் கடந்த 5-ந் தேதி இரவு நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று செண்பக தியாகராஜர் சுவாமி வசந்த மண்டபத்திலிருந்து யதாஸ்தானத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதையொட்டி தியாகராஜருக்கு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து தியாகராஜர் ஆட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு ஆட்டத்துடன் தியாகராஜர் வசந்த மண்டபத்திலிருந்து யதாஸ்தானத்திற்கு எழுந்தருளினார்.

விழாவில் கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான்சாமிகள், நிர்வாக அதிகாரி சுந்தர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் வருகிற 12-ந் தேதி தேரோட்டமும், 13-ந் தேதி சனீஸ்வரபகவான் தங்க காக வாகனத்தில் எழுந்தருளி சகோபுர வீதி உலாவும், 14-ந்தேதி தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.
Tags:    

Similar News