ஆன்மிகம்
கோவில் கோபுர கலசத்தில் சிவாச்சாரியார் புனிதநீர் ஊற்றியதையும், விழாவில் கலந்து கொண்டவர்களையும் படத்தில் காணலாம்

பட்டத்தரசி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2019-04-13 05:09 GMT   |   Update On 2019-04-13 05:09 GMT
கோவை மருதமலை சாலையில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவை மருதமலை சாலையில், லிங்கனூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த கருப்பராயன் கோவில் அருகில் பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. இங்கு கும்பாபிஷேக விழா விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது. இதையடுத்து முதல் மற்றும் இரண்டாம் கால வேள்வி பூஜை, விநாயகர் வழிபாடு, புனித நீர் ஊற்றுதல், ஆனைமுகன் வேள்வி, 8 விதமான திருமகள் வேள்வி, நவகோள் வேள்வி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பூமா தேவி வழிபாடு, புனித மண் எடுத்தல், புனித நீர் எடுத்து புதிய மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள், இறை மூர்த்திகளை அமைதி நிலை ஏற்படுத்துதல், கோபுரத்தில் கலசங்கள் நிறுவுதல் ஆகியவை நடைபெற்றன. இதையடுத்து முளைப்பாரி பூஜை, கங்கணம் அணிவித்தல், திருக்குடங்கள் அலங்கரிக்கப்பட்டன.

இதன் பின்னர் வேள்வி சாலையில் பராசக்தியை திருக்கலசத்தில் எழுந்தருளச் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை தொடர்ந்து இரண்டாம் கால பூஜைகள், புதிய மூர்த்திகளுக்கு காப்புக்கட்டுதல், மஹா பூர்ணாகுதி நடைபெற்றது. காலை 10 மணி அளவில் வேள்வி சாலையில் இருந்து கலசங்கள் கொண்டு வரப்பட்டது.

பின்னர் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். கருவறையில் உள்ள பட்டத்தரசி அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பி.ஆர்.ஜி. அருண்குமார் எம்.எல்.ஏ., எம்.ஜி.ஆர். இளைஞர் அணி புறநகர் மாவட்ட செயலாளர் சந்திரசேகர், செந்தில்பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News