ஆன்மிகம்

கடலூர் துறைமுக உப்பனாற்றில் தெப்ப உற்சவம்

Published On 2019-02-21 06:03 GMT   |   Update On 2019-02-21 06:03 GMT
கடலூர் துறைமுக உப்பனாற்றில் நேற்று தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கடலூர் துறைமுகம் அருகே உள்ள சோனாங்குப்பம் ஸ்ரீவெங்கடேச பெருமாள், சிங்காரத்தோப்பு வெள்ளரிஅம்மன், அக்கரைக்கோரி கண்ணூர் மாரியம்மன், சலங்கைகாரத்தெரு நாகமுத்தாலம்மன் மாரியம்மன், ஆற்றங்கரைவீதி ஏழை மாரியம்மன் ஆகிய கோவில்களில் நேற்று முன்தினம் மாசி மகத்தையொட்டி சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் சாமி வீதிஉலா நடைபெற்றது. பின்னர் இரவு கடலூர் துறைமுகத்தில் உள்ள உப்பனாற்றில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதற்காக வெங்கடேச பெருமாள் உள்ளிட்ட சாமிகள் கடலூர் துறைமுக உப்பனாற்றுக்கு வந்தன.

இதையடுத்து தெப்பத்திற்காக மின்விளக்குகளால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தனித்தனி விசைப்படகுகளில் வெங்கடேச பெருமாள், வெள்ளரி அம்மன், கண்ணூர் மாரியம்மன், நாக முத்தாலம்மன் மாரியம்மன், ஏழை மாரியம்மன் ஆகிய 5 சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து சாமிகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் தைக்கால்தோணித்துறை கருப்பு முத்து மாரியம்மன், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய விசைப்படகில் எழுந்தருளினார். தொடர்ந்து தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு பணியில், கடலூர் முதுநகர், துறைமுக போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
Tags:    

Similar News