ஆன்மிகம்

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைக்கப்பட்டது

Published On 2019-01-21 03:53 GMT   |   Update On 2019-01-21 03:53 GMT
சபரிமலையில் சுமார் 65 நாட்கள் பூஜைக்குப்பின் நடை அடைக்கப்பட்டது. இது குறித்த விரிவான செய்தியை இங்கே பார்க்கலாம்.
கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் இந்து அமைப்புகளும், பா.ஜனதா போன்ற எதிர்க்கட்சிகளும் போராட்டம் நடத்தின.

இந்த சூழலில் துலாம் மாத பூஜைக்காக அக்டோபர் மாதம் 5 நாட்கள் சபரிமலையில் நடை திறக்கப்பட்டது. அப்போது தடை செய்யப்பட்ட வயதுடைய பெண்கள் சிலர் ஐயப்பனை தரிசிக்க முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தியதில் வன்முறை அரங்கேறியது.

இதன் தொடர்ச்சியாக மகரவிளக்கு-மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 16-ந்தேதி சபரிமலை நடை திறக்கப்பட்டது. இதில் டிசம்பர் 27-ந் தேதி வரை மண்டல பூஜை நடத்தப்பட்டு நடை அடைக்கப்பட்டது. பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக 30-ந்தேதி மீண்டும் நடை திறக்கப்பட்டது.

சுமார் 65 நாட்கள் நடந்த இந்த விழாக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்று அதிகாலையில் பந்தளம் மன்னர் குடும்பத்தை சேர்ந்த ராகவ வர்மா ராஜா சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து பஸ்மாபிஷேகம் நடந்தது. பின்னர் ஹரிவராசனம் இசைக்க 6.15 மணிக்கு கோவிலின் நடை அடைக்கப்பட்டது.

அடுத்ததாக சபரிமலையில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 12-ந்தேதி மீண்டும் நடை திறக்கப்படுகிறது. மாசி மாத பூஜைக்காக அப்போது 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு இருக்கும்.
Tags:    

Similar News