ஆன்மிகம்
சபரிமலை சன்னிதானத்தில் அய்யப்பனை தரிசிக்க இருமுடி கட்டி வந்திருந்த பக்தர்களின் கூட்டத்தை படத்தில் காணலாம்.

இன்று மாலையில் மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் குவிந்த பக்தர்கள்

Published On 2019-01-14 05:15 GMT   |   Update On 2019-01-14 05:15 GMT
சபரிமலையில் இன்று (திங்கட்கிழமை) மாலையில் மகர ஜோதி தரிசனம் நடைபெறுவதால், லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ந்தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. நாள்தோறும் அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியான மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் இன்று (திங்கட்கிழமை) மாலை நடக்கிறது. இதையொட்டி நடத்தப்படும் சுத்திகிரியை பூஜைகள் கடந்த 2 நாட்களாக தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையிலும், மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி முன்னிலையிலும் நடந்தது.

மகரவிளக்கு பூஜையையொட்டி சாமி அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் மாலை 6.20 மணிக்கு சன்னிதானத்திற்கு வந்து சேரும். அவற்றை தந்திரி ராஜீவரு மற்றும் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி ஆகியோர் பெற்று கொள்கின்றனர்.

அந்த திருவாபரணங்களை சாமிக்கு அணிவித்து சிறப்பு தீபாராதனை நடத்துவார்கள். அப்போது பொன்னம்பல மேட்டில் சாமி அய்யப்பன் ஜோதி வடிவில் 3 முறை காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெறும். பு‌ஷ்பாபிஷேகத்தை தொடர்ந்து இரவு 7.52 மணிக்கு மகர சங்கரம சிறப்பு பூஜையும், அபிஷேகமும் நடைபெறுகிறது.

மகரஜோதி தரிசனத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர். ஏராளமானோர் கூடாரம் அமைத்து தங்கியுள்ளார்கள். குறிப்பாக பெரியானை வட்டம், பாண்டித்தாவளம், பம்பை, சன்னிதானம் ஆகிய இடங்களில் பக்தர்கள் முகாமிட்டு உள்ளார்கள். இவ்வாறு தங்கியுள்ள பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க ஏராளமான தன்னார்வ தொண்டர்களை திருவிதாங்கூர் தேவசம்போர்டு நியமித்து உள்ளது.

இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணிக்கு பம்பை மற்றும் சன்னிதானத்தில் 5 ஆயிரம் போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படையினரும் அவர்களுடன் இணைந்து பாதுகாப்பு பணியை செய்து வருகிறார்கள்.

ஜோதி தரிசனம் முடிந்து சொந்த ஊருக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஆயிரம் சிறப்பு பஸ்கள் தயார் நிலையில் உள்ளன.

இந்த சிறப்பு பஸ்கள் திருவனந்தபுரம், பத்தனம் திட்டை, செங்கனூர், கோட்டயம், எர்ணாகுளம், கோழிக்கோடு, திருச்சூர், கொல்லம் உள்பட கேரளாவின் பல்வேறு ஊர்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். அதே போல தமிழ்நாட்டில் கோவை, மதுரை, தென்காசி, கம்பம் ஆகிய பகுதிகளுக்கும் இயக்கப்பட உள்ளன.

இந்தநிலையில் சன்னிதானத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பத்மகுமார் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்து வந்த பத்மகுமார், ‘மகரஜோதி தரிசனத்தையொட்டி அனைத்து முன்னேற்பாடுகளும், சிறப்பாக செய்யப்பட்டு உள்ளது‘ என்றார்.
Tags:    

Similar News