ஆன்மிகம்
ராபத்து உற்சவத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் தேவநாதசாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.

திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் ராபத்து உற்சவம்

Published On 2018-12-20 04:19 GMT   |   Update On 2018-12-20 04:19 GMT
திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் ராபத்து உற்சவம் தொடங்கி நடந்து வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற தேவநாதசாமி கோவில். இங்கு ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதசி விழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 8-ந்தேதி பகல்பத்து உற்சவத்துடன் தொடங்கியது. தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, 17-ந்தேதி பகல் பத்து உற்சவம் நிறைவு பெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

இதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு ராப்பத்து உற்சவம் தொடங்கியது. இதையொட்டி இரவில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் உட்பிரகாரத்தில் வீதிஉலாவாக வந்து, அங்குள்ள ராபத்து உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு தேசிகர் மற்றும் ஆழ்வார்களுக்கு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வருகிற 27-ந்தேதி வரை நடைபெறும் ராபத்து உற்சவத்தில் தினசரி இரவு பெருமாள், தேசிகர் மற்றும் ஆழ்வார்களுக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். பின்னர் நாலாயிர திவ்விய பிரபந்தம் வாசிக்கப்பட்டு சாமிக்கு சாற்றுமுறை நடைபெறும்.

இதில் முக்கிய நிகழ்ச்சியாக 24-ம் தேதி (திங்கட்கிழமை) மூலவர் தேவநாதசாமிக்கு ஆபரண தங்கத்தை அகற்றி தைலகாப்பு உற்சவம் நடைபெறுகிறது. இதை தொடர்ந்து சித்திரை மாத பிரமோற்சவம் வரையில் தைலக்காப்புடன் தேவநாதசாமி அருள்பாலிப்பார். அதன்பின்னர் மீண்டும் பெருமாளுக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்பட இருக்கிறது.
Tags:    

Similar News