ஆன்மிகம்

லட்சுமி நரசிம்மர் வடிவம் உணர்த்தும் வாழ்க்கை தத்துவங்கள்

Published On 2018-12-16 11:27 GMT   |   Update On 2018-12-16 11:27 GMT
லட்சுமி நரசிம்மர் வடிவமைப்பும் நமது வாழ்க்கைக்கு தேவையான மிக முக்கியமான ஒரு விஷயத்தை உணர்த்தும் வகையில் உள்ளது. இது குறித்து அறிந்து கொள்ளலாம்.

இறைவனின் ஒவ்வொரு அவதாரமும் நமது வாழ்க்கைக்கு தேவையான ஒரு விஷயத்தை உணர்த்துவதாகவும், கற்றுத்தருவதாகவும் அமைந்துள்ளன. அதுபோல இறை வடிவங்களிலும் நமது வாழ்க்கைக்கு தேவையான சூட்சமங்கள் நிறைந்துள்ளன.

உதாரணத்துக்கு தமிழ் கடவுள் முருகப்பெருமானின் வடிவ அமைப்பை எடுத்துக்கொண்டால் வாழ்க்கை தத்துவங்கள் மறைந்து இருப்பதை உணரமுடியும். முருகப்பெருமானின் கையில் உள்ள வேல் மற்றும் பொருட்கள் ஒவ்வொரு தத்துவத்தை நமக்கு சுட்டிக்காட்டுகின்றன.

அதுபோலத்தான் லட்சுமி நரசிம்மர் வடிவமைப்பும் நமது வாழ்க்கைக்கு தேவையான மிக முக்கியமான ஒரு விஷயத்தை உணர்த்தும் வகையில் உள்ளது. பொதுவாக கடவுள் உருவங்கள் தனித்தனியாக தான் இருக்கும். ஆனால் லட்சுமி நரசிம்மர் இருக்கும் ஆலயங்களில் லட்சுமியும் நரசிம்மரும் ஒரே அம்சமாக ஒருங்கிணைந்து காணப்படுவார்கள்.

அதாவது நரசிம்மர் மடிமீது லட்சுமி அமர்ந்திருப்பார். லட்சுமியை அன்போடு அணைத்தபடி நரசிம்மர் இருப்பார். நரசிம்மர் அவதாரம் எடுத்து தனது நோக்கத்தை நிறைவேற்றிய பிறகு தொடர்ந்து ஆக்ரோஷமாக காணப்பட்டார். அவரது கோபத்தை தணித்தது லட்சுமிதான். கோபம் தணிந்த பிறகே சாந்தமான நரசிம்மர் லட்சுமியை தனது மடிமீது அமர்த்தி மகிழ்ந்தார். அந்த வகையில் லட்சுமி வந்த பிறகே நரசிம்மர் தம் வாழ்வில் பரிபூரணம் பெற்றார்.

எனவே இறைவடிவங்களில் லட்சுமி நரசிம்மர் வடிவம் நிகரற்றது. மிகவும் தனித்துவம் கொண்டது. மனைவிக்கு மரியாதை கொடுக்க வேண்டும். மனைவியை கவுரவப் படுத்த வேண்டும் என்ற மிகப்பெரிய தத்துவத்தை லட்சுமி நரசிம்மர் வடிவம் நமக்கு காட்டுகிறது. ஆக்ரோஷமாக இருக்கும் நரசிம்மரையும் பாருங்கள், அவரை சாந்தப் படுத்திய பிறகு அவர் மடியில் அமர்ந்திருக்கும் லட்சுமி நரசிம்மரையும் பாருங்கள்... லட்சுமி நரசிம்மரின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும்.

கோபத்தில் இருப்பவரிடம் போய் ஏதாவது கேட்டால் கிடைக்காது. ஆனால் மகிழ்ச்சியோடு இருப்பவரிடம் போய் கேட்டால் நிச்சயம் பலன் உண்டு. இந்த தத்துவத்தையும் லட்சுமி நரசிம்மரின் வடிவம் நமக்கு காட்டுகின்றது. அதுமட்டுமின்றி ஆணுக்கு பெண் சமம் என்ற உயர்ந்த கோட்பாட்டையும் லட்சுமி நரசிம்மர் வடிவத்தில் காணமுடியும்.

பொதுவாக வேலைக்கு சென்றுவிட்டு வீடுதிரும்பும் கணவனை மனைவி சாந்தப்படுத்தி உபசரிக்க வேண்டும். கணவன் எவ்வளவு டென்ஷனாக இருந்தாலும், மனைவி முகத்தைப் பார்த்ததும் சாந்தமாக மாற வேண்டும். அதுதான் உண்மையான தாம்பத்தியம். ஒவ்வொரு விஷயத்திலும் பெண்ணை முன்னிலைப்படுத்த வேண்டும். எந்த வீட்டில் பெண் சுதந்திரமாக முன்நிறுத்தப்படுகிறாளோ, அந்த வீட்டில் லட்சுமி குடியிருப்பாள் என்பார்கள். 

வீட்டில் இருக்கும் பெண்கள் கண்ணீர் விடக்கூடாது என்பது ஐதீகம் ஆகும். அதற்கேற்ப ஆண்கள் நடந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு கணவனும் தனது சம்பாத்தியம் முழுவதையும் மனைவி கையில் கொடுத்துவிட்டே வாங்க வேண்டும். ஐந்து ரூபாயாக இருந்தாலும் சரி, ஐந்து லட்சமாக இருந்தாலும் சரி மனைவி கையில் கொடுத்துவிட்டு பெற்றால் அந்த வீடு லட்சுமிகரமாக மாறும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

இதைத்தான் மறைமுகமாக லட்சுமி நரசிம்மர் கோலம் நமக்கு சொல்கிறது. இதை உணர்ந்துவிட்டால் போதும் கணவன் மனைவிக்கு இடையில் எந்த சிறு மனஸ்தாபமும் வராது. எனவே கணவனுக்கோ, மனைவிக்கோ சிறு வருத்தம் ஏற்பட்டாலும் லட்சுமி நரசிம்மர் இருக்கும் திசை நோக்கி, நரசிம்மா எனது குடும்பத்தை வாழையடி வாழையாக வாழவை என்று மனம் உருகி பிரார்த்தனை செய்தாலே போதும் லட்சுமி நரசிம்மர் ஓடோடி வந்து உதவி செய்வார். 
Tags:    

Similar News