ஆன்மிகம்
அருகன்குளம் ராமலிங்கசுவாமி கோவிலில் அன்னாபிஷேகம் நடந்ததையும், அதில் பங்கேற்ற பக்தர்களையும் படத்தில் காணலாம்.

மகாதேவ அஷ்டமி: அருகன்குளம் ராமலிங்கசுவாமி கோவிலில் அன்னாபிஷேகம்

Published On 2018-12-01 03:20 GMT   |   Update On 2018-12-01 03:20 GMT
நெல்லை அருகே உள்ள அருகன்குளம் ராமலிங்கசுவாமி கோவிலில் மகாதேவ அஷ்டமியையொட்டி அன்னாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை அருகே உள்ள அருகன்குளம் பழைய கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ராமலிங்கசுவாமி சமேத பர்வதவர்தினி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தாமிரபரணி நதிக்கரையில் இயற்கை சூழல் நிறைந்த இடத்தில் உள்ளது. இந்த கோவில் ராமபிரான் வழிபட்ட கோவிலாகும். இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான வேலைகள் நடந்து வருகிறது.

இந்த கோவில் நேற்று காலை 10 மணிக்கு மகாதேவ அஷ்டமியையொட்டி ராமலிங்கசுவாமி, சிறப்பு கும்ப பூஜை நடந்தது. மதியம் 12 மணிக்கு அன்னாபிஷேகமும், இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அங்குள்ள பிண்டம் போட்ட ராமருக்கும் சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. மதியம் 2 மணிக்கு அன்னதானம் நடந்தது.

கார்த்திகை மாதம் தேய்பிறையில் வருகின்ற அஷ்டமி திதி, மகாதேவ அஷ்டமியாகும். இந்த தேய்பிறை அஷ்டமியில் தான் கால பைரவர் தோன்றினார். இதனால் அனைத்து சிவன் கோவில்களிலும் உள்ள காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெறும். நெல்லையப்பர் கோவிலில் மகாதேவ அஷ்டமியையொட்டி சுவாமிக்கும், அம்பாளுக்கும், காலபைரவருக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதையொட்டி காலபைரவருக்கு பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

பாளையங்கோட்டை திரிபுராந்தீசுவரர் கோவிலில் உள்ள மகாதேவருக்கு நேற்று மாலையில் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 
Tags:    

Similar News