ஆன்மிகம்
தசரா திருவிழாவை முன்னிட்டு, திருச்செந்தூரில் வேடம் அணிந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

குலசேகரன்பட்டினத்தில் நாளை மறுநாள் சூரசம்ஹாரம்

Published On 2018-10-17 04:39 GMT   |   Update On 2018-10-17 04:39 GMT
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக, இங்குதான் பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து, அம்மனை வழிபடுகின்றனர்.

கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விரதம் இருந்து காப்பு அணிந்த பக்தர்கள் நேர்த்திக்கடனாக காளி, சிவன், வி‌ஷ்ணு, பிரம்மன், விநாயகர், முருகபெருமான், கிரு‌ஷ்ணர், ராமர், லட்சுமணர், சுடலைமாடன், அனுமார் போன்ற பல்வேறு சுவாமிகளின் வேடங்களையும், முனிவர், அரசர், போலீஸ்காரர், செவிலியர், நரிக்குறவர், அரக்கன், சிங்கம், புலி, கரடி உள்ளிட்ட பல்வேறு வேடங்களையும் அணிந்தனர்.

ஒவ்வொரு ஊரிலும் வேடம் அணிந்த பக்தர்கள் குழுக்களாக வாகனங்களில் ஊர் ஊராக சென்று, காணிக்கை வசூலித்து வருகின்றனர். தசரா குழுக்கள் சார்பில் கரகாட்டம், மேற்கத்திய நடனம், பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். 6-ம் நாளான நேற்று முன்தினம் இரவில் சிம்ம வாகனத்தில் மகி‌ஷாசுரமர்த்தினி கோலத்தில் அம்மன் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 7-ம் நாளான நேற்று இரவில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் கோலத்தில் அம்மன் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

10-ம் நாளான நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) இரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான மகி‌ஷா சூரசம்ஹாரம் நடக்கிறது.
Tags:    

Similar News