ஆன்மிகம்

கூடலழகர் பெருமாள் கோவில் வைகாசி திருவிழா 21-ந்தேதி தொடங்குகிறது

Published On 2018-05-18 06:28 GMT   |   Update On 2018-05-18 06:28 GMT
ஆழ்வார்களால் பாடபட்ட திருத்தலங்கள் திவ்ய தேசங்களாக அழைக்கப்படும் கூடலழகர் பெருமாள் கோவில் வைகாசி திருவிழா 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
ஆழ்வார்களால் பாடபட்ட திருத்தலங்கள் திவ்ய தேசங்களாக அழைக்கப்படுகிறது. அதன் படி மதுரையில் கூடலழகர் கோவில், அழகர் கோவில், திருமோகூர் கோவில் ஆகியவை திவ்ய தேசங்களாக போற்றப்படுகிறது. இதில் அழைத்து அபயம் அளிக்கும் தலமாக விளக்கும் கூடலழகர் பெருமாள் கோவில் பெருந்திருவிழா வருடம் தோறும் வைகாசி மாதத்தில் நடைபெறுகிறது.

இந்த வருடம் வருகிற 20-ந் தேதி மாலையில் விஷ்வசேனர் புறப்பாடுடன் திருவிழா தொடங்கி அடுத்த மாதம்(ஜூன்) 3-ந் தேதி உற்சவ சாந்தி அலங்கார திருமஞ்சனத்துடன் விழா நிறைவடைகிறது. திருவிழாவின் முக்கியமான நிகழ்ச்சிகள் பற்றிய விவரம் வருமாறு:-

21-ந் தேதி காலை 9.05 மணி முதல் 10.25 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்கி காலையும் மாலையும் பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 4-ம் திருநாளான 24-ந் தேதி வடக்கு மாசி வீதி ராமாயணச்சாவடியில் கருட வாகனத்தில் எழுந்தருளுகிறார். 5-ம் திருநாளில் நேதாஜி ரோடு அனுமார் கோவிலில் சேஷ வாகனத்திலும், 6-ம் திருநாள் பழங்காநத்தம் கோனார் மண்டபத்தில் யானை வாகனத்திலும் எழுந்தருளுகிறார்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 29-ந் காலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. 31-ந் தேதி மதிச்சியம் ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 12-ம் திருநாளன்று(1-ந் தேதி) தெற்காவணி மூல வீதி கன்னிகாபரமேஸ்வரி மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளுகிறார்.

ஏற்பாடுகளை தக்கார் மாரிமுத்து, செயல் அலுவலர் நடராஜன் ஆகியோர் செய்து வருகின்றனர். 
Tags:    

Similar News