ஆன்மிகம்

சிவன் கோவில்களில் சிவராத்திரி கோலாகலம்

Published On 2018-02-14 02:32 GMT   |   Update On 2018-02-14 02:32 GMT
சிவன் கோவில்களில் சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிறப்பு பூஜைகளில் கலந்துகொண்ட பக்தர்கள் விடிய, விடிய விழித்திருந்து வழிபாடு நடத்தினார்கள்.
சிவராத்திரி இந்துக்களின் முக்கிய பண்டிகை ஆகும். சிவனுக்கு உகந்த சிவராத்திரி முக்கிய விரத நாளாகவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நேற்று சிவராத்திரியையொட்டி நாடு முழுவதும் சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. மும்பையில் உள்ள சிவன் கோவில்களிலும் சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.

பிரசித்தி பெற்ற மும்பை பாபுல்நாத் சிவன் கோவில், தானே கோபினேஸ்வர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

தானே அம்பர்நாத்தில் உள்ள பழமைவாய்ந்த சிவன் கோவிலில் சிவராத்திரி சிறப்பு வழிபாடுகள் நடந்தன. பல்வேறு இடங்களிலும் இருந்து வந்திருந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.



கோவில்களில் உள்ள சிவலிங்கத்திற்கு பக்தர்கள் பால் அபிஷேகம் செய்தும், கற்பூர ஆரத்தி காட்டியும் வழிபட்டனர்.

காட்கோபர் காமராஜ் நகரில் உள்ள சிவன் கோவில், ஸ்ரீதேவி முத்துமாரியம்மன் கோவில், தாராவி சிவன் கோவில், சர்வோதயா ராமேஸ்வர் சிவன் கோவில், ஜங்லேஸ்வர் சிவன் கோவில், போரிவிலி கானேஹரி சிவன் கோவில், பன்வெல் சுக்காபூர் காசிநாத் அன்னபூர்னேஷ்வரி கோவில் உள்பட தானே, நவிமும்பை, புனே பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சிவராத்திரி விரதம் மேற்கொண்டனர். அவர்கள் சிவன் கோவில்களில் விடிய, விடிய கண் விழித்து சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர். சிவராத்திரியையொட்டி இரவு முழுவதும் 3 யாமகால பூஜைகள் நடந்தன. அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை 4-ம் யாமகால பூஜை நடந்தது. அந்த சமயம் பக்தர்கள் பஜனை பாடல்களை பாடியபடி இறைவனை வழிபட்டனர்.

பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை காரணமாக மும்பை உள்பட மாநிலம் முழுவதும் உள்ள சிவன்கோவில்களை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Tags:    

Similar News