ஆன்மிகம்
அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றதையும், பக்தர்கள் புனித நீராடுவதையும் படத்தில் காணலாம்.

இலந்துறை சுந்தரேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம்

Published On 2017-12-13 06:12 GMT   |   Update On 2017-12-13 06:13 GMT
இலந்துறை சுந்தரேஸ்வரர் கோவிலில் கார்த்திகை கடைசி செவ்வாய் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் புனித நீராடினர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே இலந்துறையில் சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. சுந்தரேஸ்வரர், அபிராமி அம்மனுடன் அருள்பாலித்து வரும் இக்கோவில் செவ்வாய் தோஷ நிவாரண தலமாக பக்தர்களால் வழிபடப்பட்டு வருகிறது. காசியபர், அகத்தியர், கண்வர், பிருகு, அத்திரி, கபிலர், மதங்கர், வியாசர், துர்வாசர், பரத்துவாசர், சதானந்தர், யாக்ஞவல்கியர் உள்ளிட்ட முனிவர்களும், சூரியனும் இக்கோவில் சுந்தரேஸ்வரரை வழிபட்டதாக தலவரலாறு கூறுகிறது.

இலந்தை மரம் இக்கோவிலின் தலவிருட்சமாகும். வியாசரால் உருவாக்கப்பட்ட வியாச குளம் இக்கோவிலின் தீர்த்தமாகும்.

கார்த்திகை மாத செவ்வாய்க்கிழமைகளில் இக்கோவிலில் உள்ள வியாச குளத்தில் புனித நீராடுவது சிறப்பானதாக கருதப்படுகிறது. இதனால் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமை தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கார்த்திகை கடைசி செவ்வாய்க்கிழமையையொட்டி கோவிலில் தீர்த்தவாரி உற்சவம் நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு பகல் 12 மணிக்கு பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்றது.

இதை தொடர்ந்து மதியம் 4.30 மணியளவில் பஞ்சமூர்த்திகள் வியாச குளம் முன்பு எழுந்தருளினர். இதையடுத்து அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு வியாச குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.
Tags:    

Similar News