ஆன்மிகம்
பத்மா புஷ்கரணியில் புனித நீராடிய லட்சக்கணக்கான பக்தர்களை படத்தில் காணலாம்.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பஞ்சமி தீர்த்தத்தில் புனித நீராடிய பக்தர்கள்

Published On 2017-11-24 06:14 GMT   |   Update On 2017-11-24 06:14 GMT
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவ விழா நிறைவு நாளான நேற்று பத்மா புஷ்கரணியில் பஞ்சமி தீர்த்த புனித நீராடல் நடந்தது.
திருப்பதியை அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வந்தது. தினமும் காலை, இரவு என இருவேளைகளில் உற்சவர் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

விழாவின் நிறைவு நாளான நேற்று அதிகாலை பத்மாவதி தாயாரை துயில் எழுப்பி, அதிகாலை 3.30 மணியில் இருந்து 4 மணிவரை சுப்ரபாத சேவை, 4 மணியில் இருந்து 4.30 மணிவரை சகஸ்ர நாமார்ச்சனை, 4.30 மணியில் இருந்து 5.30 மணிவரை நைவேத்தியம் ஆகியவை நடந்தன. காலை 6.30 மணியில் இருந்து 8 மணிவரை உற்சவர் பத்மாவதி தாயார் பல்லக்கில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அதைத்தொடர்ந்து காலை 10 மணியில் இருந்து 11.30 மணிவரை பஞ்சமி தீர்த்த மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயார், சக்கரத்தாழ்வார் ஆகியோருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. இதையடுத்து பகல் 11.48 மணியளவில் மகர லக்னத்தில் கோவில் அருகில் உள்ள பத்மா புஷ்கரணியில் பஞ்சமி தீர்த்த புனித நீராடல் (சக்கர ஸ்நானம்) நிகழ்ச்சி நடந்தது. அப்போது புஷ்கரணியில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர்.

பின்னர் இரவு 7.30 மணியில் இருந்து 8.30 மணிவரை உற்சவர் பத்மாவதி தாயார் தங்க திருச்சி வாகனத்தில் கொடி மரத்துக்குக் கீழே எழுந்தருளினார். உற்சவர் பத்மாவதி தாயார் முன்னிலையில் பிரம்மோற்சவ விழா கொடியிறக்கம் நடந்தது. இதோடு பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு பல்வேறு இடங்களில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News