ஆன்மிகம்

திருப்பரங்குன்றம் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா 24-ந்தேதி தொடங்குகிறது

Published On 2017-11-22 05:02 GMT   |   Update On 2017-11-22 05:02 GMT
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வருகிற 24-ந் தேதி கொடியேற்றத்துடன் திருக்கார்த்திகை தீப திருவிழா தொடங்குகிறது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் திருக்கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டிற்கான தீப திருவிழா வருகிற 24-ந்தேதி(வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழா தொடர்ந்து வருகிற 3-ந் தேதி வரை நடக்கிறது.

திருவிழாவையொட்டி தினமும் காலையிலும், இரவிலும் பல்வேறு வாகனங்களில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 1-ந் தேதி பட்டாபிஷேகமும், 2-ந் தேதி காலையில் தேரோட்டமும் நடக்கிறது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 2-ந்தேதி மாலை 6 மணிக்கு கோவிலுக்குள் பால தீபம் ஏற்றப்படுகிறது.

இதேவேளையில் மலையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதனையடுத்து சன்னதி தெருவில் உள்ள பதினாறு கால் மண்டபம் அருகே சொக்கப்பனை தீப காட்சி நடக்கிறது.

திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக 3-ந்தேதி தீர்த்த உற்சவம் நடக்கிறது.

திருக்கார்த்திகை தீபத்தையொட்டி 3 அடி உயரம், 2 அடி அகலம் கொண்ட தாமிர கொப்பரையும், 350 லிட்டர் நெய், 100 மீட்டர் கடா துணியிலான திரி, 5 கிலோ கற்பூரம் ஆகியவை தயார்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வழக்கம்போல தீபம் ஏற்றுவதற்கு திருவண்ணாமலையிலிருந்து தீப நிபுணர் குழுவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் துணை கமிஷனர் கவிதா பிரியதர்ஷினி செய்து வருகிறார்.
Tags:    

Similar News