ஆன்மிகம்
நெல்லையப்பர் கோவில் திருக்கல்யாண விழாவில் சுவாமி-அம்பாள் பக்தர்களுக்கு காட்சி கொடுத்ததை படத்தில் காணலாம்.

நெல்லையப்பர் கோவிலில் சுவாமி - அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதிஉலா

Published On 2017-11-18 05:43 GMT   |   Update On 2017-11-18 05:43 GMT
நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவையொட்டி நேற்று சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதிஉலா நடைபெற்றது.
நெல்லையில் உள்ள நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து தினமும் காலை மற்றும் இரவில் சுவாமி- அம்பாள் வீதி உலா சென்று வந்தனர். மேலும் கோவில் ஊஞ்சல் மண்டபத்தில் பக்திஇசை, சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் கடந்த 14-ந் தேதி அம்பாள் சன்னதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெற்றது. இதை தொடர்ந்து ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் விழா தொடங்கி நடந்து வந்தது. இந்த விழா நேற்று முன்தினம் இரவு வரை நடந்தது. தினமும் மாலையில் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, சுவாமி-அம்பாள் பூப்பந்து உருட்டி விளையாடும் வைபவம் நடந்தது.

நேற்று மறுவீடு பட்டணப்பிரவேச விழா நடந்தது. இதையொட்டி காலை 10 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, ஹோம பூஜை நடந்தது.

இரவு 7-30 மணிக்கு சுவாமி நெல்லையப்பரும், காந்திமதி அம்பாளும் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டணப்பிரவேசம், வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் ஊழியர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News