ஆன்மிகம்
திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற சூரசம்ஹார காட்சிகளை படத்தில் காணலாம்.

திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரம்: பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க தரிசனம்

Published On 2017-10-26 04:11 GMT   |   Update On 2017-10-26 04:11 GMT
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. அப்போது பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 20-ந் தேதி காப்பு கட்டுதலுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடந்தது.

கோவிலில் இருந்து மாலை 5 மணிக்கு முருகப்பெருமான் தங்கமயில் வாகனத்தில் அமர்ந்தபடி தன் தாயாரிடம் பெற்ற சக்திவேலு டன் சன்னதி தெருவில் உலா வந்தார். அதேசமயம் வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளிய போர்ப்படை தளபதியான வீரபாகுவும் சன்னதி தெருவுக்கு வந்தார். அப்போது அங்கு வந்த சூரபத்மனிடம் முருகப்பெருமான் போரிட்டார்.

இதில் சூரபத்மன் சிங்கமுகமாகவும், ஆட்டுத் தலையாகவும், மனிதத் தலையாகவும் மாறி மாறி உருவெடுத்தான். ஆனால் முருகப்பெருமான் தேவர் களை துன்புறுத்திய சூரபத்மனை சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பு சக்திவேல் கொண்டு சம்ஹாரம் செய்தார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க தரிசனம் செய்தனர்.

இதையடுத்து முருகப் பெருமானுக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து முருகப்பெருமான் உற்சவர் சன்னதிக்கு சென்றார். அங்கு முருகப்பெருமான் தெய்வானைக்கு மகா தீபாராதனை நடந்தது. பின்பு தெய்வானையுடன் முருகப் பெருமான் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவில் இன்று(வியாழக்கிழமை) மலையை சுற்றி சட்டத்தேர் பவனியும், மாலையில் பாவாடை தரிசனமும், தங்கக்கவச அலங்காரமும் நடக்கின்றன.
Tags:    

Similar News