ஆன்மிகம்

கிருத்திகையையொட்டிமுருகன் கோவில்களில் சிறப்பு பூஜை

Published On 2017-10-10 05:10 GMT   |   Update On 2017-10-10 05:10 GMT
கிருத்திகையையொட்டி விருத்தாசலம் பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
விருத்தாசலம் அருகே உள்ள மணவாளநல்லூரில் பிரசித்தி பெற்ற கொளஞ்சியப்பர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேற்று கிருத்திகை பூஜை நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் உள்ள சித்தி விநாயகர் மற்றும் கொளஞ்சியப்பருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், சந்தனம், மாப்பொடி, திரவியப்பொடி உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

இதையடுத்து சித்தி விநாயகர் சந்தன காப்பு அலங்காரத்திலும், கொளஞ்சியப்பர் தங்க காப்பு அலங்காரத்திலும் அருள்பாலித்தனர். இதையடுத்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னர் மாலை 6 மணிக்கு கோவிலில் வெள்ளித்தேர் புறப்பாடு நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் கொளஞ்சியப்பர் எழுந்தருளினார். தொடர்ந்து கோவில் உட்பிரகாரத்தில் தேர் வலம் வந்தது. இதையடுத்து சித்தி விநாயகர் மற்றும் கொளஞ்சியப்பர் சாமி வீதி உலா நடைபெற்றது. இதில் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் விருத்தாசலம் வேடப்பர், ஆழிச்சிக்குடி சுப்பிரமணியர், விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணிய சாமிக்கு கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

குறிஞ்சிப்பாடி விழப்பள்ளத்தில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலில் கிருத்திகையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து, வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியசாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். பின்னர் கோவில் உட்பிரகாரத்தில் சாமி வலம் வந்தார். இதில் குறிஞ்சிப்பாடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News