ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் கோவிலில் நடந்த தாயார் திருவடி சேவையில் கலந்து கொண்டு பக்தர்கள் தரிசனம் செய்த போது எடுத்த படம்.

ஸ்ரீரங்கம் கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும் தாயார் திருவடி சேவை

Published On 2017-09-28 04:56 GMT   |   Update On 2017-09-28 04:56 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும் தாயார் திருவடி சேவையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 21-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் தாயார் என்று அழைக்கப்படும் ஸ்ரீரெங்க நாச்சியார் திருமஞ்சனம் கண்டருளினார்.

பின்னர் கொலு மண்டபத்தில் எழுந்தருளினார். கொலு மண்டபத்தில் வீற்றிருந்த தாயாரை பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதே போல் ஒவ்வொரு நாளும் கொலு மண்டபத்தில் எழுந்தருளிய தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

நவராத்திரி விழாவின் ஏழாம் நாள் தாயார் திருவடி சேவை உற்சவ நாளாகும். திருவடி சேவை தினமான நேற்று மாலை 4 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி பொன்னால் வேயப்பட்ட கொலு மண்டபத்தில் 4.45 மணிக்கு எழுந்தருளினார்.

ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் பல உற்சவங்களின் போது தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தாலும், நவராத்திரி விழாவின் ஏழாவது நாள் மட்டுமே தனது கால் பாதங்கள் தெரியும்படி சேவை சாதிப்பது வழக்க மாகும். இதன் காரணமாகவே இதற்கு தாயார் திருவடி சேவை என பெயர் வந்தது. இதன்படி நேற்று உற்சவர் தாயாரின் கால் பாதங்கள் தெரியும்படி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

இது ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும் உற்சவம் என்பதால் தாயாரின் திருவடிகளை சேவிப்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். இரவு 10.45 மணிக்கு பின்னர் தாயார் மூலஸ்தானத்திற்கு சென்றார். நாளை (வெள்ளிக்கிழமை) சரஸ்வதி பூஜை தினத்தன்று தாயார் திருமஞ்சனம் கண்டருளும் உற்சவம் நடக்கிறது.

இதற்காக மாலை 5 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகும் தாயார் மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை திருமஞ்சனம் கண்டருள்கிறார். அன்றைய தினம் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மூலவர் சேவை கிடையாது என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News