ஆன்மிகம்

குணசீலத்தில் வெங்கடாஜலபதி பெருமாள் ஹனுமந்த வாகனத்தில் வீதி உலா

Published On 2017-09-26 06:31 GMT   |   Update On 2017-09-26 06:31 GMT
குணசீலம் வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் தேர் திருவிழாவையொட்டி நேற்று சுவாமி ஹனுமந்த வாகனத்தில் வீதி உலா வந்தார்.
குணசீலம் வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் தேர்த்திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவில் அன்ன வாகனத்திலும், இரண்டாம் நாளான நேற்று முன்தினம் சிம்ம வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. மூன்றாம் நாள் திருவிழாவான நேற்று இரவு ஹனுமந்த வாகனத்தில் சுவாமி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இன்று(செவ்வாய்க்கிழமை) இரவு தங்க கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளுகிறார். நாளை(புதன்கிழமை) சேஷ வாகனத்திலும், நாளை மறுநாள்(வியாழக்கிழமை) யானை வாகனத்திலும் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 7-ம் நாளான(வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு பெருமாள் உபயநாச்சியாருடன் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அதை தொடர்ந்து 6.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இரவு 9.30 மணிக்கு புஷ்பக விமானத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

30-ந் தேதி அன்று இரவு 7.30 மணிக்கு குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் அக்டோபர் 1-ந் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 5.30 மணிக்கு பெருமாள் உபய நாச்சியாருடன் தேரில் எழுந்தருளுகிறார். அதை தொடர்ந்து 8.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறுகிறது. அன்று மாலை 4 மணிக்கு தீர்த்த வாரியும், 2-ந் தேதி மாலை 4 மணிக்கு துவாதச ஆராதனம், ஸ்நபன திருமஞ்சனமும், இரவு 8 மணிக்கு சப்தாவரணமும் நடைபெறுகிறது. 3-ந் தேதி இரவு 9 மணிக்கு ஆடும் பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் பிச்சுமணி அய்யங்கார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
Tags:    

Similar News