ஆன்மிகம்

மேல்மலையனூரில் எங்கு பார்த்தாலும் எலுமிச்சம் பழம்

Published On 2017-09-05 06:54 GMT   |   Update On 2017-09-05 06:54 GMT
மலையனூர் அம்மனுக்கு மிகவும் பிடித்தமானது எலுமிச்சம் பழம் ஆகும். அதனால்தானோ, என்னவோ மேல்மலையனூரில் எங்கு பார்த்தாலும் எலுமிச்சம் பழம் மயமாக காட்சி அளிக்கிறது.
மலையனூர் அம்மனுக்கு மிகவும் பிடித்தமானது எலுமிச்சம் பழம் ஆகும். அதனால்தானோ, என்னவோ மேல்மலையனூரில் எங்கு பார்த்தாலும் எலுமிச்சம் பழம் மயமாக காட்சி அளிக்கிறது.

கடைகளில் கூட மற்ற மலர் மாலைகளை விட எலுமிச்சம் பழ மாலையே அதிகமாக விற்பனை ஆகிறது. அது போல அங்காளம்மனை தரிசனம் செய்ய வரிசையில் நின்று செல்லும் பக்தர்களில் பெரும்பாலானவர்கள் கையில் ஒரு எலுமிச்சம் பழமாவது வைத்திருப்பார்கள்.

அந்த எலுமிச்சம் பழத்தை அங்காளம்மன் பாதத்தில் வைத்து வழிபட்டு, பெற்று செல்லும் அவர்கள் பிறகு அவற்றை பல்வேறு விதமாக பயன்படுத்துகிறார்கள். சில பக்தர்கள் அந்த எலுமிச்சம் பழத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்று விடுவார்கள்.

சில பக்தர்கள் அந்த எலுமிச்சம் பழத்தை தங்களை சுற்றி, திருஷ்டி கழிப்பது போல கழித்து காலில் போட்டு மிதித்து விடுவார்கள். அமாவாசை ஊஞ்சல் உற்சவ நாளின்போது அங்காளம்மன் ஆலயத்தை சுற்றி, பல்லாயிரக்கணக்கானவர்கள் இத்தகைய எலுமிச்சம் படி வழிபாட்டை செய்கிறார்கள். அமாவாசைக்கு மறுநாள் பார்த்தால் அங்காளம்மன் ஆலயத்தை சுற்றி டன் கணக்கில் எலுமிச்சம் பழம் காலில் மிதித்து நசுக்கப்பட்ட நிலையில் கிடக்கும்.

எலுமிச்சம் பழத்தில் இருந்து வெளியேறும் சிட்ரிக் அமிலம் தண்ணீராக பெருக்கெடுத்து நிற்கும். அதை மிதித்தால் காலில் அரிச்சல் கூட ஏற்பட்டு விடுவதுண்டு. சமீப காலமாகத்தான் இந்த வழிபாட்டு முறை தோன்றியுள்ளது.



இது தவறான வழிபாடாகும் என்று அங்காளம்மனின் 7 வம்ச பரம்பரையைச் சேர்ந்தவர்களில் ஒருவரான சரவணன் என்பவர் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: -

எலுமிச்சம் பழம் என்பது ராஜகனி ஆகும். அது மிகவும் புனிதமானது. இறைதன்மை கொண்டது. இத்தகைய சிறப்புடைய எலுமிச்சம் பழத்தை திருஷ்டி கழிக்க பயன்படுத்தலாம். எத்தகைய திருஷ்டி, பார்வையை அது விரட்டி விடும் என்பதில் சந்தேகமே இல்லை.

அதிலும் அங்காளம்மனுக்கு சமர்ப்பித்து விட்டு பெறும் எலுமிச்சம் பழத்துக்கு சக்தி மிக, மிக அதிகம். அத்தகைய எலுமிச்சம் பழத்தை ஒருவர் தனக்குத்தானே ஒரு போதும் சுற்றவேக் கூடாது.

வேறு யாராவது ஒருவர்தான் சுற்றி கழிப்பு செய்ய வேண்டும். மேலும் எலுமிச்சம் பழத்தை காலால் மிதிப்பது மிக, மிக தவறு. இறைதன்மை கொண்ட எலுமிச்சம் பழத்தை காலால் மிதிப்பது பாவத்தைத்தான் சேர்க்கும்.

ஒன்று அந்த எலுமிச்சம் பழத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம் அதை பூஜை அறையில் வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. வீட்டுக்கு எடுத்து செல்ல மனம் இல்லாதவர்கள் அதை மற்றவர்கள் பாதிக்கப்படாதபடி கையால் உடைத்து போடலாம். காலால் ஒரு போதும் மிதிக்கவே கூடாது.

இவ்வாறு சரவணன் கூறினார்.
Tags:    

Similar News