ஆன்மிகம்

புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2017-08-12 03:46 GMT   |   Update On 2017-08-12 03:46 GMT
தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சையை ஆண்ட சோழ பேரரசர்கள் தஞ்சையை சுற்றிலும் எட்டு திசைகளிலும் அஷ்டசக்திகளை காவல் தெய்வங்களாக அமைத்தனர். அவ்வாறு தஞ்சைக்கு கீழ்ப்புறத்தில் அமைய பெற்ற சக்தியே புன்னைநல்லூர் மாரியம்மன் ஆகும். தஞ்சையில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலின் மூலஸ்தான மாரியம்மன் புற்று மண்ணால் உருவாக்கப்பட்டது. மூலவர் புற்று மண்ணால் ஆனதால் மூலஸ்தான அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. தைலக்காப்பு சாற்றப்படு கிறது.

இத்தகைய சிறப்பு மிக்க புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோவில்களுள் ஒன்றாகும். இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திற்கு உட்பட்டதாகும். இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு ஆவணி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி கொடி கம்பத்திற்கு பால், மஞ்சள், சந்தனம் போன்ற பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, கொடி ஏற்றப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. மேலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து படிச்சட்டத்தில் அம்மன் வீதிஉலா நடை பெற்றது. நாளை(ஞாயிற்றுக் கிழமை) மாலை 7 மணிக்கு முத்துப்பல்லக்கில் அம்மன் வீதிஉலாவும், 15-ந் தேதி மாலை 6 மணிக்கு முத்துப்பல்லக்கு விடையாற்றி விழாவும் நடக்கிறது.

20-ந் தேதி ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமை சிம்ம வாகனத்தில் அம்மன் புறப்பாடும், 27-ந் தேதி அன்ன வாகனத்தில் அம்மன் புறப்பாடும், அடுத்தமாதம்(செப்டம்பர்) 2-ந் தேதி பெரியகாப்பு, படிச்சட்டத்தில் அம்மன் புறப்பாடும், 3-ந் தேதி காலையில் படிச்சட்டத்தில் அம்மன் புறப்பாடும், மாலையில் வெள்ளி அன்ன வாகனத்தில் அம்மன் புறப்பாடும், 4-ந் தேதி காலையில் படிச்சட்டத்தில் அம்மன்புறப்பாடும், மாலையில் சிம்மவாகனத்தில் அம்மன் புறப்பாடும் நடக்கிறது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பூத வாகனம், வெள்ளி ரிஷப வாகனம், ஓலைப்பல்லக்கு, யானை வாகனம், சேஷ வாகனம், குதிரை வாகனம், வெண்ணைத்தாழி அலங்காரத்தில் அம்மன் புறப்பாடு நடக்கிறது.

10-ந் தேதி பிற்பகல் 3 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 12-ந் தேதி காலை கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 17-ந் தேதி இரவு 8 மணிக்கு தெப்பத்திருவிழா நடக்கிறது. 19-ந் தேதி தெப்ப விடையாற்றி விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் பரணிதரன், கண்காணிப்பாளர்கள் தமிழ்ச்செல்வி, சுரேஷ், மாதவன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News